

ஒரு ஐசிசி போட்டியில் மூன்றுமுறை ஆசிய அணிகள் தகுதி பெற்றது 2011 உலகக்கோப்பையின்போது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் என மூன்று ஆசிய அணிகள் 2011 உலகக்கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. அப்போது இந்திய அணி கோப்பையை வென்றது.
இந்தமுறை இங்கிலாந்தில் நடைபெறுகிற சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் மூன்று ஆசிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான். எனவே 2011 போல இந்தமுறையும் ஐசிசி போட்டியை இந்திய அணி வெல்லுமா என்கிற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
புதன்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை சந்திக்கிறது பாகிஸ்தான். அடுத்த நாளன்று இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன.
இதனால் இந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நிச்சயம் ஒரு ஆசிய அணி இடம்பெறுவது உறுதி.
இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் என்பது பலருடைய ஆருடம்.
ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே இறுதிப் போட்டி நடைபெறவேண்டும் என்பது இரு நாட்டு ரசிகர்களின் விருப்பம்.
நேற்றைய சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான். முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் மோசமாகத் தோற்றபோது அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என யாருமே எண்ணவில்லை. இதுபோல அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இன்னொரு அதிர்ச்சி கொடுக்க பாகிஸ்தான் அணியால் முடியும் என்று நம்புகிறார்கள் பாகிஸ்தான் ரசிகர்கள்.
ஆனால் 2015 உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு சிறப்பாக விளையாடி வரும் இங்கிலாந்து அணியே கோப்பையை வெல்லும் என்பது கிரிக்கெட் நிபுணர்களின் ஆருடம். அதேசமயம் இதுபோன்ற பெரிய போட்டிகளில் அடிக்கடி அதிர்ச்சிகள் நிகழும். அதன்படி இங்கிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்தவும் வாய்ப்புண்டு என்று பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இந்தியா - வங்கதேசம் இடையேயான அரையிறுதியில் வங்கதேசம் ஜெயிக்கும் என்கிற நம்பிக்கை யாருக்கும் இல்லை. வலுவான தென் ஆப்பிரிக்க அணியையே எளிதில் வீழ்த்திய இந்திய அணி வங்கதேசத்தையும் எளிதில் வீழ்த்தும் என்பது அனைவருடைய கணிப்பு.
இப்போது சொல்லுங்கள். இறுதிப் போட்டியில் எந்த மாதிரியான போட்டி அமையும்?
இந்தியா vs இங்கிலாந்து
அல்லது
இந்தியா vs பாகிஸ்தான்
ஆனால் ஒன்று, யாருமே எதிர்பார்க்காத பாகிஸ்தான் vs வங்கதேசம் போட்டி கூட அமையலாம். 1983 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ஆரம்பத்தில் இந்திய வீரர்களே நம்பவில்லை. ஆடுகளத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அதுதான் கிரிக்கெட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.