300-வது ஒருநாள்: யுவ்ராஜுக்கு சச்சின் உணர்வுபூர்வமான வாழ்த்து!

அவர் தாண்டிய தடைகளை எண்ணினால் உணர்ச்சிவசப்படத் தோன்றுகிறது... 
300-வது ஒருநாள்: யுவ்ராஜுக்கு சச்சின் உணர்வுபூர்வமான வாழ்த்து!

எக்பாஸ்டனில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதின. வங்கதேசத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் களமிறங்கிய யுவ்ராஜ் சிங், 300 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 5-வது இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர் (463 போட்டி), ராகுல் திராவிட் (340), முகமது அசாருதீன் (334), செளரவ் கங்குலி (308) ஆகியோர் மற்ற இந்தியர்கள் ஆவர். அதேநேரத்தில் சர்வதேச அளவில் மேற்கண்ட மைல்கல்லை எட்டும் 19-ஆவது வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார் யுவ்ராஜ் சிங். இதுவரையில் அவர் 14 சதம், 52 அரை சதங்களுடன் 8,622 ரன்கள் குவித்துள்ளார்.

யுவ்ராஜின் இந்தச் சாதனை குறித்து சமூகவலைத்தளத்தில் சச்சின் டெண்டுல்கர் உணர்வுபூர்வமாக எழுதியதாவது: யுவ்ராஜ் சிங் என்றால் மீண்டு எழும் தன்மை கொண்டவர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பல சவால்களைத் தாண்டி அவர் மீண்டும் இந்திய அணிக்குள் இடம் பிடித்துள்ளார். 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட அவர் தாண்டிய தடைகளை எண்ணினால் உணர்ச்சிவசப்படத் தோன்றுகிறது.

அவர் கிரிக்கெட் வாழ்க்கை ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. ஆனால் அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் ஒருபோதும் துவண்டுவிடக்கூடாது என்றெண்ணித்தான் மீண்டுவந்துள்ளார். அவரால் எதிரணியை வீழ்த்தி இந்திய அணிக்கு மேலும் பல வெற்றிகளைத் தர முடியும் என்று கூறியுள்ளார்.  

யுவ்ராஜ் சிங் 2011-ம் வருடம் புற்றுநோய்க்காக அமெரிக்காவிலும் லண்டனிலும் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அமெரிக்காவில் கும்பிளேவும் லண்டனில் சச்சினும் யுவ்ராஜை நேரில் சந்தித்து உற்சாகமூட்டினார்கள். சக வீரர்கள் நண்பர்களாக இருந்து யுவ்ராஜைத் தேற்றிய தருணம் அது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com