பெங்களூர் டெஸ்ட்: திருப்பி அடிக்குமா இந்திய அணி?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி பெங்களூரில் நாளை தொடங்குகிறது.
பெங்களூர் டெஸ்ட்: திருப்பி அடிக்குமா இந்திய அணி?
Updated on
4 min read

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி பெங்களூரில் நாளை தொடங்குகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் மோதி வருகிறது. இதில் புணேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. 

புணே ஆடுகளத்தில், முதல் நாளில் இருந்தே பந்து சுழலத் தொடங்கியது. இருப்பினும், ஆடுகளத்தின் மேற்பரப்பு ஆடுவதற்கு உகந்த வகையில் இருந்ததால், இரு இன்னிங்ஸ்களிலும் ஆஸ்திரேலியா 250 ரன்களுக்கு மேல் எடுத்தது. ஆனால், இரண்டிலும் சேர்த்து இந்திய அணியால் 74 ஓவர்களைக் கூட கடக்க இயலவில்லை. இதனால் இந்திய அணி பெங்களூரில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு, இந்திய அணி சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 20 டெஸ்ட் போட்டிகளில் 17 வெற்றிகளையும், 3 டிராவையும் பதிவு செய்திருந்தது. இதுதவிர உள்ளூர், வெளிநாடு என இரண்டையும் சேர்த்து கடைசியாக விளையாடிய 19 போட்டிகளில் தோல்வியை சந்திக்கவில்லை. வலுவான அணிகளான நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளை புரட்டியெடுத்த இந்திய அணி முறையே 3-0, 4-0 என்ற கணக்கில் பெரிதாக வென்றிருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணியோ, ஆசிய மண்ணில் கடைசியாக விளையாடிய 9 டெஸ்டுகளிலும் தோற்றிருந்தது. இந்திய மண்ணில் கடைசியாக 2004-ல் டெஸ்ட் போட்டியில் வென்றது ஆஸ்திரேலியா. இந்தியாவில் தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா தோற்றிருந்தது. கடைசியாக 2013-இல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்த வெற்றிக் கணக்குகள் எல்லாம் புணேவில் மாறின. இந்திய டெஸ்ட் அணியின் வெற்றி நடைக்கு ஆஸ்திரேலிய அணி முடிவு கட்டியது. இந்தத் தொடரை இந்தியா 4-0 அல்லது 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என எல்லோரும் கணித்தார்கள். ஆனால் இப்போது இந்திய அணியால் தொடரை வெல்லமுடியுமா என்கிற கேள்வி எழும் அளவுக்கு புணே டெஸ்ட் தோல்வியால் நெருக்கடியைச் சந்திக்கிறது இந்திய அணி. 

ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு பெயர்போன கோலி, அதிர்ச்சி அளிக்கும் வகையில் தனது இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே ரன் ஏதும் இன்றியும் மற்றும் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதில் முதல் இன்னிங்ஸில் கோலியை டக் அவுட் ஆக்கிய பெருமையை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் தேடிக் கொண்டார். இந்நிலையில், அதுகுறித்து மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது: கோலி ஒரு மிகச் சிறந்த வீரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த ஆண்டில் ஏற்கெனவே அவர் மலை போல ரன்களை குவித்துள்ளார். இந்த நிலையில், முதல் டெஸ்ட்டில் அவரை நாங்கள் ரன்கள் ஸ்கோர் செய்ய விடவில்லை. எனவே, 2-ஆவது போட்டியில் அவர் மிகுந்த பலத்துடனும், ஆக்ரோஷத்துடனும் திரும்புவார் என்ற எச்சரிக்கையுடன் கோலியை நாங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். எனெனில், இந்தத் தொடர் முழுவதுமாகவே கோலி ஒரு முக்கிய விக்கெட் ஆவார். அவை முழுவதுமாக அவரது விக்கெட்டை சாய்த்தால் மட்டுமே, இந்தத் தொடரில் எங்களது வெற்றியை உறுதி செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். முதல் டெஸ்ட் வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளபோதும், இந்த ஒரு வெற்றியே தொடரை கைப்பற்றுவதற்கு போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்துள்ளோம். இன்னும் 3 முக்கியமான போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று ஸ்டார்க் கூறினார்.

முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது குறித்துப் பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, ’தோல்வியை திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. நாங்கள் முன்னோக்கி செல்வதற்காகவே இங்கு வந்திருக்கிறோம். ஒரு பயிற்சியாளராக பழைய விஷயங்களை மறந்துவிட்டு முன்னோக்கிச் செல்வது எனக்கு மிக முக்கியமானதாகும். எங்களுக்கு சாதகமாக இல்லாத போட்டிகளில் முதல் டெஸ்டும் ஒன்று. எனவே அதிலிருந்து வெளியே வருவது மிக முக்கியம். என்ன நடந்ததோ அது நடந்ததுதான். அதைப் பற்றி அதிகளவில் கவலைப்படக்கூடாது. அடுத்ததாக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடியது. இந்திய அணி சரியாக விளையாடவில்லை. ஆடுகளம் சவாலாக இருந்தது. அதற்கு இந்திய வீரர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளவில்லை' என்றார்.

அஜிங்க்ய ரஹானேவுக்கு இங்கிலாந்து தொடர் சிறப்பானதாக அமையவில்லை. அந்தத் தொடரில் பெரிய அளவில் ரன் குவிக்காத அவர், காயம் காரணமாக பாதியிலேயே விலக நேரிட்டது. அதேநேரத்தில் அந்தத் தொடரில் ரஹானேவுக்குப் பதிலாக வாய்ப்புப் பெற்ற கருண் நாயர் முச்சதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலும் ரஹானே சோபிக்கவில்லை. அவர் கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 204 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் ரஹானேவுக்குப் பதிலாக கருண் நாயருக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அனில் கும்ப்ளே அது தொடர்பாக கூறியதாவது: கருண் நாயர் முச்சதம் அடித்த பிறகும்கூட அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது துரதிருஷ்டவசமானதாகும். 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதால் அவரை அணியில் சேர்க்க முடியவில்லை. ஆனால் அணியில் அவரைப் போன்ற மாற்று வீரர்கள் இருப்பது மிக நல்ல விஷயமாகும். ஆனால், ரஹானேவை நீக்குவது தொடர்பான கேள்விக்கே இடமில்லை. முந்தைய போட்டிகளில் அவர் சிறப்பாக ஆடி ரன் குவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக ரன் குவித்திருக்கிறார். இந்திய அணியைப் பொறுத்தவரையில் ரஹானேவை நீக்குவது தொடர்பாக இதுவரை ஆலோசிக்கப்படவில்லை. 16 வீரர்களுமே தயார் நிலையில் இருக்கிறார்கள். தற்போதைய அணியில் இருக்கும் அனைவருமே வெற்றிகரமான வீரர்கள்தான். யார் களமிறங்கினாலும் சிறப்பாக ஆடுகிறார்கள் என்பது மிக அழகான விஷயமாகும். அதேநேரத்தில் கூடுதல் பெளலர்களுடன் களமிறங்குகிறபோது நல்ல பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது என்றார்.

கே.எல்.ராகுல், முரளி விஜய், புஜாரா, கேப்டன் கோலி, அஜிங்க்ய ரஹானே, ரித்திமான் சாஹா போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்கு பலம் சேர்க்கின்றனர். ஆனால் புணே டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் 13 பேர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர். எனவே 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 பெளலர்களுடன் களமிறங்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த கும்ப்ளே, ’அணி வெற்றி பெறுவதற்கு தேவையான சரியான கூட்டணியை களமிறக்குவோம். உதாரணமாக ஒரு போட்டியில் வெல்வதற்கு 4 பெளலர்கள் போதும் என நினைத்தால் 4 பெளலர்களை மட்டுமே களமிறக்குவோம். மாறாக 5 பெளலர்கள் தேவை என நினைத்தால் 5 பெளலர்களுடன் களமிறங்குவோம். வெற்றி பெறுவது மட்டும்தான் எங்களுடைய இலக்கு' என்றார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார். இதே கருத்தைப் பலரும் கூறியுள்ளார்கள். எனவே குல்தீப் யாதவ், புவனேஸ்வர் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவும் வாய்ப்பு உண்டு.

ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், மட் ரென்ஷா, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது.

வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சில் ஸ்டீவ் ஓ"கீப், நாதன் லயன் ஆகியோரை நம்பியுள்ளது ஆஸ்திரேலியா. 32 வயதான ஸ்டீவ் ஓ"கீஃப், புணே டெஸ்ட் போட்டியோடு சேர்த்து மொத்தம் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். புணே போட்டிக்கு முன்பு வரை அவர் மொத்தம் 14 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். 5 விக்கெட் வீழ்த்தியது கிடையாது. ஆனால் புணே டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களிலும் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

புணே டெஸ்டில் ஆடிய அதே ஆஸ்திரேலிய அணி பெங்களூரிலும் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா (உத்தேச லெவன்): கே.எல்.ராகுல், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ்/குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா/புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மட் ரென்ஷா, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவ் ஓ"கீப், நாதன் லயன், ஜோஷ் ஹேஸில்வுட்.

போட்டி நேரம்: காலை 9.30
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com