

இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனான புஜாராவுக்கு ஐபிஎல்-லில் இடம் கிடையாது. 2014-க்குப் பிறகு அவர் ஐபிஎல் போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவதில்லை. இந்த வருட ஐபிஎல் ஏலத்திலும் அவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.
கடந்த டெஸ்ட் சீசன் தொடங்கி அக்டோபர் 2016 முதல் செப்டம்பர் 2017 வரையிலான ஒருவருடக் காலத்தில் புஜாரா ரூ. 4.25 கோடி சம்பாதிப்பார் என்று வைத்துக்கொண்டால் இதர இந்திய வீரர்களின் வருமானத்தோடு ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. இந்த ஒரு ஐபிஎல்-லில் இந்திய அணிக்காக குறைந்த ஆட்டங்களில் விளையாடிய அம்பட்டி ராயுடு ரூ. 6 கோடியும் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா ரூ. 6.50 கோடியும் சம்பாதித்துவிடுவார்கள். நெஹ்ரா ரூ. 5.50 கோடி, ராபின் உத்தப்பா ரூ. 5 கோடி என இந்திய அணியில் இல்லாத அல்லது குறைவாக விளையாடி வரும் வீரர்களே இந்த ஒரு ஐபிஎல்-லில் புஜாராவின் ஒரு வருட டெஸ்ட் சம்பளத்தை விடவும் அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள். ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் டி.நடராஜன் ரூ.3 கோடிக்கு ஏலம் போனார்.
இதுபோன்ற வருமான வேறுபாடுகளை புஜாரா எப்படி எடுத்துக்கொள்கிறார்? ஒரு பேட்டியில் அவர் கூறுகிறார்.
நான் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க மாட்டேன். நாள் முழுக்க பயிற்சியில் இருப்பேன். எனவே மாலை வேளைகளில் குடும்பத்துக்காக நேரத்தைச் செலவழிப்பேன். அப்போது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பேன். எனவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஐபிஎல் போட்டிகளை நான் பார்ப்பதில்லை. நான் ஐபிஎல்-லில் விளையாடுவதில்லை என்பதற்காக இப்படி செய்வதில்லை. வேறு யாராவது ஐபிஎல் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது நானும் அதைப் பார்க்க நேரிடும்.
ஐபிஎல்-லில் மற்ற வீரர்கள் சம்பாதிப்பது பற்றிக் கேட்கிறீர்கள். டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவி, சக வீரர்கள் மற்றும் எதிரணியின் மரியாதையைப் பெறுவதில் உள்ள திருப்தி வேறு எதிலும் கிடைக்காது. மற்றவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. இதுவரை சம்பாதித்தது எனக்கு மதிப்புமிக்கதாகும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.