ரூ. 14 கோடி சம்பளத்துக்கு நியாயம் செய்யும் ஸ்டோக்ஸ்!

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 14.5 கோடிக்கு ஸ்டோக்ஸ் தேர்வானபோது புருவம் உயர்த்தாதவர்களே இருக்கமுடியாது.
ரூ. 14 கோடி சம்பளத்துக்கு நியாயம் செய்யும் ஸ்டோக்ஸ்!
Updated on
2 min read

எட்டு ஐபிஎல் ஆட்டங்களில் மூன்று ஆட்ட நாயகன் விருதுகள். இரண்டு பெளலிங்குக்காக. ஒன்று நேற்றைய அட்டகாச சதத்துக்காக. 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-ஆவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியைத் தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ். அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 63 பந்துகளில் 6 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தார். இந்த சீசனில் 6-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள புணே அணி, அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. அதேநேரத்தில் 7-ஆவது தோல்வியை சந்தித்துள்ள குஜராத், ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

நேற்று புணே அணி ஜெயிக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. 1.3 ஓவர்களில் 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது புணே. இதையடுத்து திரிபாதியுடன் இணைந்தார் பென் ஸ்டோக்ஸ். ஆரம்பம் முதலே பென் ஸ்டோக்ஸ் பவுண்டரிகளையும், சிக்ஸரையும் விளாசினார். 38 பந்துகளில் அரை சதம் கண்டார். பாசில் தம்பி வீசிய 19-ஆவது ஓவரில் ஸ்டோக்ஸ் இரு சிக்ஸர்களை விரட்ட, அந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தன. இதனால் புணேவின் வெற்றி எளிதானது. ஃபாக்னர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த பென் ஸ்டோக்ஸ், 61 பந்துகளில் சதமடித்தார். டி20 போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இது. புணே 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. பென் ஸ்டோக்ஸ் 63 பந்துகளில் 103, கிறிஸ்டியான் 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 14.5 கோடிக்கு ஸ்டோக்ஸ் தேர்வானபோது புருவம் உயர்த்தாதவர்களே இருக்கமுடியாது. ஆனால் தனக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு காசுக்கு நியாயம் செய்துள்ளார் ஸ்டோக்ஸ்.

பிப்ரவரி மாதம் நடைபெற்ற பத்தாவது ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக ரூ.14.5 கோடிக்கு ஏலம் போனார். அவரை ரைஸிங் புணே சூப்பர்ஜயண்ட்ஸ் அணிவாங்கியது. பென் ஸ்டோக்ஸுக்கு அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட 7 மடங்கு அதிக விலைக்கு ஏலம் போயிருக்கிறார். பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவியது. அவருடைய பெயர் ஏலத்திற்கு வந்தபோது அவரை வாங்க மும்பை, டெல்லி, பெங்களூர் அணிகள் ஆர்வம் காட்டின. ஆனால் ஏலத் தொகை ரூ.10.5 கோடியை எட்டியபோது மும்பை அணி போட்டியிலிருந்து விலகியது. இதையடுத்து டெல்லியும், பெங்களூரும் தீவிரம் காட்ட, ஹைதராபாத் அணி ரூ.12.5 கோடிக்கு ஏலம் கேட்டது. இதன்பிறகு ஏலத்தில் குதித்த புணே அணி ரூ.13 கோடிக்கு கேட்டது. அதைத் தொடர்ந்து போட்டி நிலவ, இறுதியில் ரூ.14.5 கோடிக்கு பென் ஸ்டோக்ஸை வாங்கியது புணே.

இதுகுறித்து நேற்று பேசிய புணே கேப்டன் ஸ்மித், எங்கள் உரிமையாளர்களிடம் நான் சொன்னேன், என்ன விலை கொடுத்தாவது அவரை வாங்கிவிடுங்கள். டி20 போட்டிக்கு அவரைப் போன்ற ஆல்ரவுண்டர்கள் அவசியம். பெரிய தொகை கொடுத்து அவரை வாங்கினோ. அதற்கு ஏற்றாற்போல திறமையை வெளிப்படுத்துகிறார் என்று கூறியுள்ளார்.

அசத்தும் புள்ளிவிவரங்கள்

* 8 ஆட்டங்களில் 230 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 147.43
* இதுவரை 10 சிக்ஸர்கள் அடித்துள்ளார். புணே வீரர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் ஸ்டோக்ஸ்தான். புணே வீரர்களில் சதமடித்தவரும் இவர் மட்டும்தான். 
* மூன்று ஆட்ட நாயகன் விருதுகள். இந்த ஐபிஎல்-லில் வேறு எந்த வீரருக்கும் இந்தப் பெருமை இல்லை. 
* 8 ஆட்டங்களில் ஆறு விக்கெட்டுகள். எகானமி - 7.62. பந்துவீச்சுக்காக இருமுறை ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்றுள்ளார். 

பிளேஆஃப் நோக்கி...

கடந்த ஆறு ஆட்டங்களில் ஐந்தில் வென்றுள்ளது புணே அணி. தற்போது 10 ஆட்டங்களில் 6-ல் வென்று 12 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது புணே அணி. மீதமுள்ள நான்கு ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப் உறுதியாகிவிடும்.

எல்லாம் ஸ்டோக்ஸ் பார்த்துப்பார்!

அணிகள் போட்டிவெற்றிதோல்விமுடிவு இல்லைபுள்ளிகள்
மும்பை1082-16
கொல்கத்தா1073-14
ஹைதராபாத்1063113
புணே1064-12
பஞ்சாப்945-8
குஜராத்1037-6
பெங்களூர்112815
டெல்லி826-4

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com