யு-17 உலகக் கோப்பை கால்பந்து: காலிறுதியில் இன்று கானா-மாலி மோதல்

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் கானா-மாலி அணிகள் மோதுகின்றன.
Updated on
2 min read

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் கானா-மாலி அணிகள் மோதுகின்றன.
இதில் கானா அணி இதுவரை ஆடிய 3 ஆட்டங்களில் 2 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் "ஏ' பிரிவின் முதலிடத்தில் உள்ளது. மாலி அணியும் 3 ஆட்டங்களில் இரு வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்து அதே 6 புள்ளிகளுடன் "பி' பிரிவின் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. இப்போட்டியில் இந்த இரு அணிகளும் முதல் முறையாக சந்திக்கும் ஆட்டம் இதுவாகும்.
ஆப்பிரிக்க நாடுகளிடையேயான 17 வயதுக்கு உள்பட்டோருக்கான கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் மாலியிடம் 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்ந்த கானா அணி, இந்த உலகக் கோப்பையில் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களம் காண்கிறது. கட்டுக்கோப்பான தடுப்பாட்டமும், விரைவான தாக்குதல் ஆட்டமும் கானா அணியின் பலமாகத் திகழ்கிறது.
இந்தப் போட்டியில் அதிகம் கோலடித்த வீரர்களில் ஒருவரான கானாவின் எரிக் அயியா, இந்த ஆட்டத்திலும் அணிக்கு பக்கபலமாக இருப்பார் என நம்பலாம்.
மறுமுனையில், இராக் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 கோல்களை அடித்து காலிறுதிக்கு முன்னேறிய மாலி அணி, அதே நம்பிக்கையுடன் களம் காண்கிறது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் லாசானா, தனது கோல்களின் மூலம் அணியை பலப்படுத்துவார் என நம்பலாம்.
இங்கிலாந்து-அமெரிக்கா மோதல்: இதனிடையே, 2-ஆவது காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-அமெரிக்கா அணிகள் மோதும் ஆட்டம் கோவாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதில் இங்கிலாந்து இதுவரை ஆடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் "எஃப்' பிரிவின் முதலிடத்தில் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. அமெரிக்கா 3-இல் இரு ஆட்டங்களில் வெற்றியையும், ஒரு தோல்வியையும் சந்தித்து 6 புள்ளிகளுடன் "ஏ' பிரிவின் 3-ஆவது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டம்

கானா-மாலி, நேரம்: மாலை 5 மணி, இடம்: குவாஹாட்டி
இங்கிலாந்து-அமெரிக்கா, நேரம்: இரவு 8 மணி, இடம்: கோவா
நேரடி ஒளிபரப்பு: சோனி டென் 2, 3, டிடி ஸ்போர்ட்ஸ்.

10 லட்சத்தை தாண்டிய ரசிகர்கள் கூட்டம்

புது தில்லி, அக். 20: இந்தியாவில் நடைபெற்று வரும் பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், காலிறுதிக்கு முந்தைய சுற்றின் கடைசி இரு ஆட்டங்களைக் காண சுமார் 10 லட்சம் ரசிகர்கள் திரண்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை காலிறுதிக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டங்களில் கானா-நைஜர் அணிகள் நவி மும்பையிலும், பிரேசில்-ஹோண்டுராஸ் அணிகள் கொச்சியிலும் மோதியதைக் காண ஒட்டுமொத்தமாக 10,07,396 பார்வையாளர்கள் கூடினர். இது, யு-17 உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் 3-ஆவது அதிகபட்ச ரசிகர்கள் எண்ணிக்கையாகும். கடந்த 1985-ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் சீசனை காண 12,30,976 பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டதே உச்சபட்ச எண்ணிக்கையாகும். அதற்கு அடுத்தபடியாக மெக்ஸிகோவில் நடைபெற்ற சீசனில் 2-ஆவது அதிகபட்சமான பார்வையாளர்கள் கூடியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, போட்டி மற்றும் ஒருங்கிணைப்புக் குழு இயக்குநர் ஜாவியர் சேப்பி கூறியதாவது: பார்வையாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், கோவா, குவாஹாட்டி, கொச்சி, நவி மும்பை பகுதிகளில் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட டிக்கெட்டுகளை திரும்பப் பெற்று, அவற்றை ரசிகர்களுக்காக விற்பனை செய்துள்ளோம்.
இதன்மூலம் எஞ்சியுள்ள ஆட்டங்கள் நடைபெறும் மைதானங்களில் அனைத்து இருக்கைகளையும் நிறைவு செய்ய முயற்சித்துள்ளோம். போட்டியைக் காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், யு-17 உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச பார்வையாளர்களை ஈர்த்த பெருமையை இந்தியா பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று ஜாவியர் சேப்பி கூறினார். இந்த யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் 28-ஆம் தேதி நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com