

இலங்கை, பாகிஸ்தான் மோதிய 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் 5-0 என இலங்கையை பாகிஸ்தான் வயிட்-வாஷ் செய்து வெற்றிபெற்றது.
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதிலும் பாகிஸ்தான் 2-0 என முன்னிலைப் பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், 3-ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி மட்டும் பாகிஸ்தானில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இது இலங்கை அணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, 2009-ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்ற இலங்கை அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு போலீஸார் இருவர் உயிரிழந்தனர். மேலும் இலங்கை வீரர்கள் தாக்குதலுக்கு ஆளாகினர்.
இதன்பின்னர் உலக கிரிக்கெட் நாடுகள் அனைத்தும் பாகிஸ்தான் செல்வதை தவிர்த்தது. மேலும் முன்னர் அறிவிக்கப்பட்ட தொடர்களையும் ரத்து செய்தது. இதன் தாக்கம் 2011 உலகக் கோப்பை போட்டித் தொடரிலும் எதிரொலித்தது.
இந்த காலகட்டத்தில் ஜிம்பாப்வே அணி மட்டுமே பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இதர தொடர்கள் அனைத்தும் ஐக்கிய அரபு நாடுகளில் நடந்தன.
இதன்பின்னர் கடந்த மாதம் பயங்கரவாத அச்சுறுத்தல்களைப் போக்கும் வகையிலும், பாகிஸ்தானில் உலக நாடுகள் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பது பாதுகாப்பானது என்பதை நிரூப்பிக்கவும் அங்கு கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் அணியுடன் உலக லெவன் அணி பங்கேற்றது.
இந்நிலையில், சுமார் 8 வருட இடைவேளைக்குப் பிறகு இலங்கை அணி பாகிஸ்தானில் நடக்கும் டி20 போட்டியில் பங்கேற்கிறது. இதற்காக இலங்கை அணி வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை லாஹூர் சென்றடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.