

பஞ்சாப் காவல் துறை துணைக் கண்காணிப்பாளராக இந்திய மகளிர் அணியின் டி20 கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் (28) வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஹர்மன்பிரீத் கௌர் இந்திய ரயில்வேயில் அலுவலக கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்தார். ரயில்வே நிர்வாகத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, இவர் 5 ஆண்டுகள் வரை அந்தப் பொறுப்பில் நீடிக்க வேண்டும். அந்த காலகட்டம் நிறைவடைவதற்குள், பணியில் இருந்து விலக நேரிடும் பட்சத்தில் 5 ஆண்டு ஊதியத்தையும் ரயில்வே நிர்வாகத்துக்கு அவர் செலுத்த வேண்டும் என்பது நிபந்தனை.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இவர் சிறப்பாக விளையாடினார். பஞ்சாபைச் சேர்ந்தவரான ஹர்மன்பிரீத், தனது சிறப்பான ஆட்டத்தால் அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கின் கவனத்தை ஈர்த்தார். மாநிலத்துக்கு பெருமை சேர்த்து வருபவர் என்ற வகையில், அவருக்கு காவல் துறையில் உயர் பதவி அளிக்கப்படும் என்று முதல்வர் அமரீந்தர் சிங் உறுதி அளித்திருந்தார். அத்துடன், ரயில்வே நிர்வாகத்திடம் இதுதொடர்பாக அவர் எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து, ரயில்வேயில் தாம் வகித்துவந்த பொறுப்பிலிருந்து ஹர்மன்பிரீத் விலகினார்.
இந்நிலையில், காவல் துறை துணைக் கண்காணிப்பாளராக வியாழக்கிழமை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரது சீருடையில் தோல்பட்டை பகுதியில் அவரது பதவியை அடையாளப்படுத்த உதவும் நட்சத்திரங்களை அமரீந்தர் சிங்கும், காவல் துறை டிஜிபி சுரேஷ் அரோராவும் பொருத்தி கௌரவித்தனர்.
இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) அமரீந்தர் சிங் வெளியிட்ட பதிவில், 'காவல் துறை துணைக் கண்காணிப்பாளராக ஹர்மன்பிரீத் கௌர் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த இளம்பெண் பஞ்சாபை பெருமை கொள்ளச் செய்தவர். அவர் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் புரிவார் என்று நம்புகிறேன். அவருக்கு வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.