3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

நாங்கள் மகிழ்ச்சியாகத் தானே இருந்தோம்: மனைவியின் புகார்கள், நடவடிக்கைகள் குறித்து ஷமி வேதனை!

ஒன்றாக ஷாப்பிங் செய்தோம். ஹோலியை மகிழ்ச்சியாகக் கொண்டாடினோம். திடீரென என் மீது ஏன் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார் என்று தெரியவில்லை...

News image
Updated On :9 மார்ச் 2018, 10:06 am

எழில்

எனக்கு என் மனைவியுடன் எவ்வித பிரச்னையும் இல்லை. அவர் என்மீது புகார் கூறுவதற்கு முன்புவரை நாங்கள் மகிழ்ச்சியாகவே இருந்தோம் என பிரபல கிரிக்கெட் வீரர் ஷமி பேட்டியளித்துள்ளார்.

ஷமிக்குப் பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும் தன்னை ஓயாது துன்புறுத்துவதாகவும் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டு வருகிறார் அவருடைய மனைவி ஹசின் ஜஹான். அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு உண்டு. ஷமியின் குடும்பம் என்னைக் கடந்த மூன்று வருடங்களாகக் கொடுமைப்படுத்தி வருகிறது. என்னிடமுள்ள அனைத்து ஆதாரங்களையும் கொண்டு ஷமி மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன். ஷமியின் கள்ளத் தொடர்புகளையும் என் மீதான கொடுமைகளையும் ஜாதவ்பூர் காவல்நிலையத்தில் சொல்லியிருக்கிறேன் என்று சில நாள்களுக்கு முன்பு புகார் கூறினார். இதன் விளைவாக, புகாரில் சிக்கியுள்ள முகமது ஷமி பிசிசிஐ-யின் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் ஹசின் அளித்த புகாரின் பேரில் ஷமி மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது கொல்கத்தாவின் லால் பஸார் காவல்துறை வழக்குப்பதிந்துள்ளது. மனைவியைக் கொடுமைப்படுத்தியது, கொலை முயற்சி செய்தது, காயப்படுத்துதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஷமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனைவி தன் மீது கூறும் புகார்களுக்கு ஷமி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஹசினைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். ஆனால் அவர் என் தொலைப்பேசி அழைப்புகளை எடுக்கவில்லை. கிரிக்கெட் போட்டிக்காக தர்மசாலா செல்லும்வரைக்கும் நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். ஒன்றாக ஷாப்பிங் செய்தோம். ஹோலியை மகிழ்ச்சியாகக் கொண்டாடினோம். திடீரென என் மீது ஏன் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார் என்று தெரியவில்லை. மாமனாரிடம் பேசினேன். அவருக்கும் ஹசினின் நடவடிக்கைகள் புரியவில்லை. நான் எவ்விதக் குற்றமும் செய்யாதவன். என் மீதான புகார்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. 

நான் மேட்ச் ஃபிக்ஸிங் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். அப்படிச் செய்வதற்குப் பதிலாக நான் செத்துவிடுவேன். 

Story image

ஹசின் குடும்பம் என்னிடம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்கள். அவரைத் தவறாக வழிநடத்துவது யார் எனத் தெரியவில்லை. அவர் மனநிலை தவறிப் பேசுகிறார். என் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். நான் அவரைக் கொடுமைப்படுத்தியதாக இருந்தால் அதற்கு ஆதாரம் தேவை. 

நடந்த அனைத்தும் என்னை மிகவும் பாதிக்கின்றன. அவரை எது மாற்றியது என விளக்க வேண்டும். திடீரென என் மீது குற்றச்சாட்டுகளை வாரி இறைக்கிறார். ஒருவேளை என் கிரிக்கெட் வாழ்க்கையைப் பாழாக்குவதற்காகவும் அவர் இதுபோல சொல்லலாம். 

மனைவி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். அவருடன் இணைந்து வாழத்தான் நானும் என் குடும்பமும் எப்போதும் விரும்புவோம். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். பேட்டிகளில் நாங்கள் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தோம் என்று பார்த்திருப்பீர்கள். இதற்கு முன்பு என் மனைவியைச் சமூகவலைத்தளங்களில் விமரிசித்தபோது அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன். இப்போதும் அவருக்கு ஆதரவாக இருக்கவே விரும்புகிறேன். 

அவர் ஆதாரங்கள் என வெளிப்படுத்திய பெண்களுடனான உரையாடல்கள் எல்லாமே போலிகள். அது என் போனும் இல்லை. என் தொலைப்பேசி எண்ணும் அல்ல. அது நான் நிகழ்த்திய சாட்டும் அல்ல. நான் செய்யாத ஒன்றை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன். தென் ஆப்பிரிக்காவில் நானும் என் மனைவியும் சந்தோஷமாக ஷாப்பிங் சென்றோம். திரும்பி வந்தபிறகு கூட அவருக்கு நகைகள் வாங்கிக்கொடுத்தேன். அவருக்கு என்ன நடந்தது என்று விரைவில் கண்டுபிடிப்பேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.