ஐஎஸ்எல் & நிடாஹஸ் கோப்பை: தமிழ்நாட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்திய இரு தருணங்கள்!
இதுபோன்ற இன்னொரு வார இறுதி நாள்கள் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு மீண்டும் அமையுமா?


கடந்த வார இறுதி நாள்களைத் தமிழ்நாட்டு ரசிகர்களால் மறக்கவே முடியாது. அடுத்தடுத்து இரு நாள்களில் அவர்கள் கொண்டாடவும் பெருமிதம் கொள்ளவும் ஏராளமான காரணங்கள் இருந்தன.
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-பெங்களூரு எஃப்சி அணிகள் சனிக்கிழமையன்று மோதின. இதில் சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஐஎஸ்எல் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றது. சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு, ஐஎஸ்எல் போட்டியில் தனது முதல் சீசனிலேயே இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது மட்டுமல்லாமல் 9-வது நிமிடத்தில் முதல் கோலடித்து முன்னணி பெற்றது. சுனில் சேத்ரி இந்த கோலை அடித்து பெங்களூரு ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். ஆனால் 17 மற்றும் 45-வது நிமிடங்களில் சென்னை அணியின் மெயில்சன் ஆல்வ்ஸ் இரு கோல்கள் அடித்து சென்னை அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்தார். ரஃபேல் அகஸ்டோ, 67-வது நிமிடத்தில் கோலடித்து சென்னை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் பெங்களூருவின் மிகு ஒரு கோலடித்தாலும் அதனால் சென்னையின் வெற்றியைத் தடுக்கமுடியவில்லை. 3-2 என்கிற கோல் கணக்கில் இறுதி ஆட்டத்தை வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது. சென்னையின் எஃப்சி. இந்த சீசனில் புதிய பயிற்சியாளரான ஜான் கிரேகரியின் வழிகாட்டுதலிலும், ஜேஜே உள்ளிட்ட முக்கிய வீரர்களின் துணையாலும் சென்னை அணி கோப்பையை வென்றுள்ளது.


இந்த வெற்றியால் சென்னைக் கால்பந்து ரசிகர்கள் அதிக ஆனந்தம் அடைந்துள்ளார்கள். இதனால் தமிழ்நாட்டில் கால்பந்து வளர்ச்சி காணும், மேலும் பல புதிய திறமைகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. ஐஎஸ்எல் போட்டியில் சென்னையின் எஃப்.சி. பலம் வாய்ந்த அணி என்பது இந்த வெற்றியால் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சனி இரவை சென்னைக் கால்பந்து ரசிகர்களால் மறக்கவே முடியாது. அதேபோல நேற்றைய இரவை தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாது.
நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது.
இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா-வங்கதேசம் அணிகள் முன்னேறின. கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வென்றது.
ரோஹித் சர்மா ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவும் நிலைக்கு சென்றது இந்திய அணி. எனினும், அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி அணியை "த்ரில்' வெற்றி பெறச் செய்தார்.
ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், பவுண்டரி, சிக்ஸர்களுக்குப் பந்தை விரட்டினார். கடைசியாக ஒரு பந்தில் 5 ரன்கள் தேவை இருந்த நிலையில், சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்தார். தினேஷ் 8 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 29 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சாம்பியனான இந்திய அணிக்கு இலங்கை அதிபர் மைத்ரி பால சிறீ சேனா கோப்பையை வழங்கினார்.

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகிய மூன்று வீரர்கள் இடம்பெற்றதோடு, இந்தப் போட்டியின் இரு முக்கியமான விருதுகள் தமிழ்நாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டன. தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் ஆனார். 18 வயது வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். மேலும் மூவருமே இந்தப் போட்டியின் 5 ஆட்டங்களிலும் விளையாடி தங்கள் திறமையை நிரூபித்தார்கள். இந்த வருடம் உள்ளூர் போட்டிகளில் தமிழக அணி சிறப்பாக விளையாடாவிட்டாலும் கடந்த வருடம் மகத்தான வருடமாக அமைந்தது. அதன் அடிப்படையில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர், 18 வயதிலேயே இந்திய அணிக்குத் தேர்வாகி மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு தமிழக வீரர்களின் பங்களிப்பு அதிகம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இதுபோன்ற இன்னொரு வார இறுதி நாள்கள் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு மீண்டும் அமையுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...