முகமது ஷமியைத் தெருவில் வைத்து உதைக்க வேண்டும்: மனைவி ஹசின் காட்டம்!

அலிஷ்பாவுக்கு என் கணவருடன் உறவு உண்டு என்பதைப் பலமுறை நான் சொல்லியிருக்கிறேன். மோசமான காரியங்களைச் செய்யவே...
முகமது ஷமியைத் தெருவில் வைத்து உதைக்க வேண்டும்: மனைவி ஹசின் காட்டம்!
Published on
Updated on
2 min read

இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் குடும்ப வன்முறை புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது பாய் என்பவரிடம் இருந்து அலிஷ்பா என்ற பெண் மூலமாக முகமது ஷமி பணம் பெற்றதாக அவரது மனைவி ஹசினின் செல்லிடப்பேசி பதிவு வெளியானது. இதையடுத்து, அந்தப் பணம் பெற்ற விவகாரம் குறித்து பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு உத்தரவிட்டது. சமீபத்தில், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான திருத்தப்பட்ட ஊதிய ஒப்பந்தப் பட்டியல் வெளியான நிலையில், முகமது ஷமியின் பெயர் அதில் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷமியின் பாகிஸ்தான் தோழி அலிஷ்பா இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்தில் ஷமியைப் பின்தொடர்ந்தேன். அதன் மூலமாகத்தான் நான் அவருடைய நண்பரானேன். அவருக்கு உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவர். நான் அவருக்கு மெசேஜ்கள் அனுப்பினேன். ஒரு மனிதராக ஷமியை எனக்கு மிகவும் பிடிக்கும். தனக்குப் பிடித்த வீரரை நேரில் சந்திக்க வேண்டும் என்பது எந்தவொரு ரசிகரின் விருப்பமாக இருக்கும். அவர்மீது எனக்கு மரியாதை உண்டு. 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பிறகு முதல்முறையாக அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். அதிலிருந்து எங்கள் உரையாடல் தொடர்ந்தது. நாங்கள் நல்ல நண்பர்கள் ஆனோம். என் சகோதரி ஷார்ஜாவில் உள்ளார். அதனால் நான் துபையில் ஷமியைச் சந்தித்தேன். தென் ஆப்பிரிக்காவிலிருந்து அவர் துபை செல்வதாக அறிந்தேன். நானும் என் சகோதரியைச் சந்திக்க துபைக்குச் சென்றிருந்தேன். அப்படித்தான் நாங்கள் சந்தித்தோம். 

எனக்கு முகமது பாய் என்பவரைப் பற்றி தெரியாது. ஷமியுடன் ஹோட்டலிலும் தங்கவில்லை. நேராக என் சகோதரியின் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். அடுத்தநாள் காலை ஹோட்டலுக்குச் சென்று ஷமியுடன் இணைந்து காலை உணவை உண்டேன். எங்கள் இருவருக்குமிடையே எவ்விதப் பணப்பரிமாற்றமும் நடக்கவில்லை. யாரிடமும் பொய் சொல்லாத ஒரு நபர் எப்படி நாட்டை ஏமாற்றுவார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் இதை மறுத்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அலிஷ்பா, ஷமியின் ரசிகை அல்ல. அவர் காதலியாக இருக்கலாம். அல்லது விலைமாதுவாக இருக்கலாம் - ஒரு பெண் ஓர் ஆணை தனது குடும்பத்துக்குத் தெரியாமல் ரகசியமாகச் சந்தித்து மோசமான காரியங்களைச் செய்கிறார், ஹோட்டல் அறையைப் பகிர்ந்து கொள்கிறார் என்றால். என் திருமண வாழ்க்கையை நாசமாக்கவும் என் கணவருக்குக் கெடுதல் செய்யவுமே அவர் வந்துள்ளார். என் கணவரும் அவருக்குக் குறைந்தவர் அல்லர். 

அலிஷ்பாவுக்கு என் கணவருடன் உறவு உண்டு என்பதைப் பலமுறை நான் சொல்லியிருக்கிறேன். மோசமான காரியங்களைச் செய்யவே அவர்கள் துபையில் சந்தித்துள்ளார்கள். இதை ஜனவரியிலிருந்து திட்டமிட்டுள்ளார்கள். அவர்கள் சந்திப்பு காலை உணவுடன் முடிந்துவிட்டதா? அது படுக்கையில் முடிந்துள்ளது. 

நான் ஷமியை அடிக்க எல்லோரும் துணைபுரியவேண்டும். அவரைத் தெருவில் வைத்து உதைக்க வேண்டும். எத்தனை பெண்களின் வாழ்வை அவர் நாசமாக்கப் போகிறார்? என்று காட்டமாகப் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com