அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

அணியின் நலனைப் பின்னுக்குத் தள்ளி சொந்த நலனுக்காக விளையாடினார்: மிதாலி ராஜ் மீது ரமேஷ் பவார் குற்றச்சாட்டு!

அணியின் திட்டங்களோடு அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. அவருடைய பொறுப்பைத் தட்டிக்கழித்து சொந்த நலனுக்காக விளையாடினார்...

News image
Updated On :29 நவம்பர் 2018, 6:20 am

சமீபத்தில் நிறைவடைந்த மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அரையிறுதியில் விளையாடிய இந்திய அணியில் மிதாலி ராஜ் உள்ளிட்ட மூத்த வீராங்கனைகள் சிலர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாததால் சர்ச்சை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர், மிதாலி ராஜ் ஆகிய இருவரும் பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி, கிரிக்கெட் செயல்பாடுகள் மேலாளர் சபா கரீம் ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்து பேசியிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சிஓஏ உறுப்பினர் டயானா எடுல்ஜி, பிளேயிங் லெவனுக்கான வீராங்கனைகள் தேர்வு தொடர்பாக அணி நிர்வாகத்தின் முடிவுகளில் கேள்வி எழுப்ப இயலாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ராகுல் ஜோரி, சபா கரீம் ஆகியோருக்கு மிதாலி ராஜ் மின்னஞ்சலாக செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது:

என்னையும், எனது நம்பிக்கையையும் அழிக்க, அதிகாரத்தில் உள்ள சிலர் நினைக்கின்றனர். நாட்டுக்காக நான் செய்த பங்களிப்புகளை துச்சமாக எண்ணுகின்றனர்.  உண்மை நிலவரத்தை அறிந்தும், பிளேயிங் லெவனில் நான் சேர்க்கப்படாத முடிவை டயானா எடுல்ஜி ஆதரித்தது என்னை மிகவும் பாதித்தது. அவர் மீது எப்போதும் நம்பிக்கை வைத்திருந்ததுடன், சிஓஏ உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு உரிய மரியாதை அளித்து வந்தேன்.
ஆனால், அவர் தனது அதிகாரத்தை எனக்கு எதிராக பயன்படுத்தியுள்ளார். இந்த கடிதத்தை எழுதுவதன் மூலம் நான் இன்னும் நெருக்கடிகளுக்கு ஆளாவேன் என்பதை அறிவேன். ஏனெனில், டயானா சிஓஏ உறுப்பினர். நான் சாதாரண வீராங்கனை.

பிளேயிங் லெவனில் என்னை சேர்க்காத முடிவுக்கான டயானாவின் ஆதரவு, அவர் ஒருதலைப்பட்சமாக நடப்பதையும், எனக்கு எதிராக ஏற்கெனவே முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டதையும் நிரூபிக்கிறது. அதேபோல், அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவாரும் என்னை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்றது முதலே அவரது நடவடிக்கைகளில் அது தெளிவாகத் தெரிந்தது. மற்றவர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபடும்போது அதை கவனித்த பவார், நான் வலைப் பயிற்சியில் ஈடுபடுகையில் கவனிக்காமல் வேறு பக்கம் நடந்து சென்றார்.

அவரிடம் பேச முயற்சிக்கும்போது செல்லிடப்பேசியை பார்த்துக் கொண்டோ, வேறு திசையில் நடந்துகொண்டோ என்னை புறக்கணித்தார். இந்த விவகாரங்களுக்கு தீர்வு காணாவிட்டால் அது அணியின் ஒழுங்கை பாதிக்கும் என்பதால் அணி நிர்வாகத்திடம் கூறினேன். அதன் பிறகே அவரது நடவடிக்கை இன்னும் மோசமானது. நான் அணியில் இருப்பதாகவே அவர் கருதவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பாக என்னை அழைத்த பவார், பிளேயிங் லெவனில் இல்லாததால் ஊடகங்கள் இருக்கும்போது மைதானத்துக்கு வரவேண்டாம் என்று என்னிடம் கூறினார். முக்கியமான ஆட்டத்தின்போது நான் அணியில் இல்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த விவகாரத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் மீது எனக்கு வருத்தங்கள் இல்லை என்று அந்த கடிதத்தில் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிசிசிஐயின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார் கூறியுள்ளதாவது:

லீக் போட்டியில் முதலிடம் வந்தும் அணியை மிதாலி ராஜ் பாராட்டவில்லை. கூட்டங்களில் குறைந்த ஆர்வத்துடன் பங்கேற்றார்.

அணியின் திட்டங்களோடு அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. அவருடைய பொறுப்பைத் தட்டிக்கழித்து சொந்த நலனுக்காக விளையாடினார்.

விரைவாக ரன்கள் குவிக்காததால் அது இதர வீராங்கனைகளுக்கு அழுத்தம் அளித்தது. பயிற்சிகளில் அவருடைய பேட்டிங், ஓடும் திறன், அதிரடியாக விளையாடுவது போன்ற முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தினேன். 

பயிற்சி ஆட்டங்களிலும் அவர் நிதானமாகவே விளையாடினார். குறைவான ஆட்டத்திறன் மற்றும் உடற்தகுதி போன்றவற்றால் அவரால் வேகமாக ரன்கள் குவிக்கமுடியவில்லை. 

மற்றவர்களை பிளாக்மெயில் செய்வதை அவர் நிறுத்தவேண்டும். பயிற்சியாளர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது. அவருடைய சொந்த நலனுக்கு முக்கியத்துவம் தருவதை விடவும் அணியின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். 

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு, ஓய்வு பெறுவதாக மிரட்டினார். ஊருக்குத் திரும்புவேன் என்றும் கூறினார். நடுவரிசையில் தான் ஆடவேண்டும் என்று அவருக்கு முன்பே சொல்லப்பட்டிருந்தது. பவர்பிளேயில் அதிரடியாக விளையாடவேண்டும் என்பதால் அவரால் அப்படி ரன்கள் குவிக்க முடியாததாலும் அதுபோல ஒரு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முரண்டு பிடித்தார். ஓய்வு அறிவித்துவிட்டு வெளியேற நினைத்தார். அவருக்கு எப்போதுமே சொந்த நலன் தான் முக்கியம். பிரச்னையை சரிசெய்ய அவரை அந்த ஆட்டத்தில் தொடக்க வீராங்கனையாகக் களமிறக்கினோம். இரு இரட்டைச் சதங்கள் அடித்தாலும் அவர் நிறைய பந்துகளை வீணடித்தார். இதனால் இதர வீராங்கனைகள் அழுத்தத்துக்கு ஆளானார்கள். அவர் ஃபீல்டிங் பயிற்சிகளில் கலந்துகொள்ள மறுத்தார்.

எனக்கும் அவருக்கும் பிரச்னை ஏற்பட்டதால் அது அணியினருக்கு அரையிறுதிச்சுற்றில் தொந்தரவாக அமைந்தது என்று எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.