யு.எஸ். ஓபன்: இறுதிச்சுற்றில் 20 வயது ஜப்பான் வீராங்கனையை  எதிர்கொள்ளும் செரீனா வில்லியம்! வரலாறு படைப்பாரா?

இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும்பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்...
யு.எஸ். ஓபன்: இறுதிச்சுற்றில் 20 வயது ஜப்பான் வீராங்கனையை  எதிர்கொள்ளும் செரீனா வில்லியம்! வரலாறு படைப்பாரா?

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச்சுற்றுக்கு முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸும் ஜப்பானைச் சேர்ந்த 20 வயது நவோமி ஒசாகாவும் தகுதி பெற்றுள்ளார்கள்.  

2017 யு.எஸ். ஓபன் போட்டியில் 2-ம் இடம் பெற்ற மேடிசன் கீஸை 6-2, 6-4 என எளிதாகத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் ஒசாகா. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு நுழைந்த முதல் ஜப்பானிய வீராங்கனை என்கிற பெயரைப் பெற்றுள்ளார். 

கடந்த இரு வருட யு.எஸ். ஓபன் போட்டிகளில் அரையிறுதியில் தோற்றுப் போய் வெளியேறிய செரீனா வில்லியம்ஸ், இந்தமுறை அரையிறுதியில் 19-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் செவஸ்டோவை எதிர்கொண்டார். முதல் இரு கேம்களைத் தவறவிட்ட செரீனா அதன்பிறகு மீண்டு வந்து அடுத்த 13 கேம்களில் 12-ஐ வென்று ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 6-3, 6-0 என எளிதாக வென்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளார் செரீனா வில்லியம்ஸ். யு.எஸ். ஓபன் போட்டியில் 9-வது முறையாகவும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 31-வது முறையாகவும் இறுதிச்சுற்றுக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். 

ஒசாகாவுடனான இறுதிச்சுற்றை வென்றால், ஏழாவது யு.எஸ். ஓபன் கோப்பையையும் 24-வது கிராண்ட்ஸ்லாமையும் செரீனா கைப்பற்றி சாதனை படைக்க வாய்ப்புண்டு. 

23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள செரீனாவுக்கு தற்போது 36 வயதாகிறது. கர்ப்பம் தரித்திருந்ததால் கடந்த 2017 ஆண்டு முழுவதும் அவரால் விளையாட முடியவில்லை. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை ஒலிம்பியா பிறந்த நிலையில் மீண்டும் விளையாடி வருகிறார் செரீனா. 

வெள்ளையர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த பணக்காரர்களின் விளையாட்டான டென்னிஸில் தொழில்முறை வீராங்கனையாக 1995-ல் செரீனா கால் பதித்தார். அப்போது அவருக்கு வயது 14. அதன்பிறகு அபாரமாக ஆடிய செரீனா 1998-ல் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றார். அந்தப் போட்டியின் 2-வது சுற்றில் தனது மூத்த சகோதரியான வீனஸிடம் தோல்வி கண்ட செரீனா, 1999-ல் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். அதன்பிறகு டென்னிஸ் உலகின் தவிர்க்க முடியாத வீராங்கனையாக உருவெடுத்த செரீனா, ஏறக்குறைய 6 ஆண்டுகள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்துள்ளார்.

கடந்த வருட ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது 3 மாதம் கர்ப்பமாக இருந்தார் செரீனா வில்லியம்ஸ். எனினும் துணிச்சலுடன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியனாகவும் ஆனார். இந்தப் பட்டத்தை வென்றதன் மூலம் 'ஓபன் எரா'வில் (1968-ல் அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அது முதலான காலமே "ஓபன் எரா' ஆகும்.) அதிக பட்டங்களை (23) வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார் செரீனா. முன்னதாக ஸ்டெஃபி கிராஃப் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருந்ததே சாதனையாக இருந்தது. இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும்பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் செரீனா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com