ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

புதிய பயிற்சியாளர் கிரஹாம் ரீடால் எழுச்சி பெறுமா இந்திய ஹாக்கி?

புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் கிரஹாம் ரீட் நியமனத்தால் இந்திய ஹாக்கி அணி மீண்டும் எழுச்சி பெறுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News image
Updated On :12 ஏப்ரல் 2019, 6:18 am

சுஜித்குமார்


புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் கிரஹாம் ரீட் நியமனத்தால் இந்திய ஹாக்கி அணி மீண்டும் எழுச்சி பெறுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹாக்கியில் ஒரு காலத்தில் வல்லரசாக திகழ்ந்த இந்தியா தொடர்ந்து ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்ற பெருமை உடையது. கடந்த 1975-இல் உலகக் கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டத்தை வென்றது.. அதன் பின்னர் 1980-இல் மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. இதுவே இந்தியா கடைசியாக பெரிய போட்டியில் வென்றதாகும். ஆசிய போட்டியில் தங்கம் வென்றிருந்தாலும், இந்திய ஹாக்கி அணியின் செயல்பாடு ஏற்ற  இறக்கமாகவே காணப்பட்டது.

தரவரிசையில் 9 அல்லது 10-ஆம் இடத்திலேயே இந்திய அணி நீடித்து வந்தது. இதற்கிடையே ஹாக்கியின் தரத்தை மேம்படுத்த ஆஸியின் ஜாம்பவான் ரிக் சார்லஸ்வொர்த் நியமிக்ப்பட்டார். அவரது மேற்பார்வையின் கீழ் இந்திய அணி ஏற்றம் பெறத் தொடங்கியது. 5-ஆம் இடத்துக்கு முன்னேறியது. கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பலமான நெதர்லாந்து, ஜெர்மனி அணிகளை வென்று இறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா, அதில் ஆஸ்திரேலியாவுடன் கடுமையாக போராடி தோல்வியுற்று ரன்னர் ஆனது.
ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணி ஜப்பான், மலேசியாவிடம் தோல்வியடைந்து வெண்கலமே வென்றது. இதனால் ஹாக்கி வட்டாரம் அதிர்ச்சிக்குள்ளானது.

இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக ஆடி வந்த இந்தியா, காலிறுதியில் நெதர்லாந்திடம் போராடி தோற்றது. 

இதனால் தலைமை பயிற்சியாளராக இருந்த இந்தியாவின் ஹரேந்திர சிங் அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் கடும் சர்ச்சை எழுந்தது. ஹரேந்திர சிங்குக்கு ஹாக்கி இந்தியா அவமரியாதை செய்ததாக புகார் எழுந்தது. மேலும் ஜூனியர் அணியை நிர்வகிக்கும் பொறுப்பு ஹரேந்திர சிங்குக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.

கடந்த 4 மாதங்களாக இந்திய ஹாக்கி அணிக்கு உயர்செயல்திறன் இயக்குநர் டேவிட் ஜான் பயிற்சியாளராக இயங்கி வருகிறார். இந்நிலையில் புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்ய ஹாக்கி இந்தியா விண்ணப்பங்களை கோரியது.35-க்கு மேற்பட்டோர் விண்ணப்பித்ததில் இறுதியாக ஆஸி. முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான கிரஹாம் ரீட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

130 சர்வதேச ஆட்டங்களில் ஆடியுள்ள ரீட், 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஆஸி. அணியில் இடம் பெற்றிருந்தார். 

மேலும் சாம்பியன்ஸ் கோப்பையில் வீரராக 1984, 1985, 1989, 1990-இலும், பயிற்சியாளராக 2012-இலும் பட்டம் வென்றார். மேலும் ஆஸி. அணியில் பயிற்சியாளராக இருந்து உலக லீக் அரையிறுதியில் வெற்றி, உலக லீகில் வெற்றி, 2018 ஒடிஸா உலகக் கோப்பையில் ரன்னர் ஆகிய சாதனைகளை படைத்துள்ளார்.

ஹாக்கி விளையாட்டில் நிலையான வெற்றிகரமான அணியாக ஆஸ்திரேலியா திகழ்ந்து வரும் நிலையில் ரீக் சார்லஸ்வொர்த்துக்கு பின் இந்திய அணிக்கு மீண்டும் ஆஸியைச் சேர்ந்தவர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரஹாம் ரீடின் தலையாய பணியே 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதாகும். 

இதுதொடர்பாக கிரஹாம் ரீட் கூறியதாவது: எந்தவித தலையீடும் இன்றி நிலையான சூழலே எனக்கும், வீரர்களுக்கும் தேவைப்படுகிறது. என்னை இந்த பணிக்கு விண்ணப்பிக்கக் கூறியதே ரிக் சார்லஸ் தான். இந்த பணி எனது நீண்ட நாள் விருப்பமாகும். இந்தியாவுக்கு பலமுறை வந்துள்ளேன். ஹாக்கி லீக் அணிகளுடனும் பணிபுரிந்துள்ளேன். இந்திய ஆட்டமுறை மிகவும் அழகானது. ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு முன்பு ஆஸியில் சுற்றுப் பயணம், புவனேசுவரத்தில் ஹாக்கி சீரிஸ் பைனல் நடக்கவுள்ளது.
 
இந்திய அணியின் தற்காப்பு நிலையை பெருமளவு மாற்ற வேண்டியுள்ளது. பயிற்சி முறை மற்றும் தொடர்பை வலுப்படுத்த வேண்டும். இந்திய வீரர்கள் அனுபவம் நிறைந்தவர்கள். ஆனால் மீண்டு எழும் தன்மை இல்லை. நமது தற்காப்பு கடினமாகவும், இரக்கமற்றதாகவும் அமைய வேண்டும். அடிப்படை விளையாட்டை மெருகேற்ற வேண்டும் என்றார். வரும் 18-ஆம் தேதி பெங்களூருவில் தேசிய சீனியர் பயிற்சி முகாமில் ரீட் இணைகிறார்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.