புகைப்படங்கள் சொல்லும் கசப்பான செய்தி: என்னதான் நடக்கிறது இந்திய அணியில்? 

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி மற்றும் துணைத் தலைவர் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு இடையே விரிசல் நிலவுவதாக எழும் தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாகவே நடைபெறும் சம்பவங்கள் அமைந்துள்ளன.
புகைப்படங்கள் சொல்லும் கசப்பான செய்தி: என்னதான் நடக்கிறது இந்திய அணியில்? 

மியாமி (அமெரிக்கா): இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி மற்றும் துணைத் தலைவர் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு இடையே விரிசல் நிலவுவதாக எழும் தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாகவே நடைபெறும் சம்பவங்கள் அமைந்துள்ளன.

இந்திய அணித் தலைவர் விராட் கோலி மற்றும் துணைத் தலைவர் ரோஹித் ஷர்மா இடையே பிளவு நிலவி வருவதாகவும், உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியதற்குப் பின்னர் இந்த விரிசல் அதிகரித்து இருப்பதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தது.

மேற்கிந்திய தீவுகளுடான போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி புறப்படுவதற்கு முன்னர் நடைபெற்ற வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, விராட் கோலியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு, ‘எனக்கும் ரோஹித்துக்கும் இடையே மோதல் நிலவுவதாக பரவிவரும் தகவல் முற்றிலும் பொய்யான செய்தி. எங்கள் இருவருக்கும் இடையே மிகவும் நல்ல உறவு நிடிக்கிறது' என கோலி  கூறியிருந்தார்.

அதன்பின்னர் ரோஹித் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நான் அணிக்காக விளையாட வருவதில்லை. என் நாட்டுக்காக மட்டுமே' என பதிவிட்டார். இதையடுத்து இருவருக்குள்ளும் நிலைமை சீராகவில்லை என்று சமூக வலைதளங்களில் விவாதம் சூடுபிடித்தது.

தற்போது அதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய அணியினர் வெளியிடும் புகைப்படங்கள் அமைந்துள்ளன. முதலில் மியாமி சேர்ந்து விட்டோம் என்னும் பொருள்படும்படியிலான 'மியாமி பவுண்ட்' எனும் பெயரில் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பியை ட்விட்டரில் கோலி வெளியிட்டார். ஆனால் அதில் ரோஹித் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் விரிசல் உண்மைதான் என மீண்டும் கூறத் துவங்கினர்.

அதையடுத்து  'ஸ்க்வாட்' என பெயரிட்டு மீண்டும் வெள்ளியன்று புகைப்படம் ஒன்றை கோலி வெளியிட்டுள்ளார். இதிலும் ரோகித் இடம்பெறவில்லை. இது கருத்துக்களை மேலும் வலுவாக்குவதாக அமைந்தது.

அதேசமயம் மற்றொரு இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் மேலும்  சில வீரர்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அதில் ரோஹித் ஷர்மா இடம்பெற்றுள்ளார். ஆனால் விராட் கோலி இடம் பெறவில்லை.

தொடரும் இந்த புகைப்பட யுத்தங்கள் இந்திய அணிக்குள் நிலைமை அவ்வளவு சுமுகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com