222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மே.இ. தீவுகள்: இந்தியா 75 ரன்கள் முன்னிலை

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மே.இ. தீவுகள்: இந்தியா 75 ரன்கள் முன்னிலை


இந்தியாவுடனான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜேசன் ஹோல்டர் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்நிலையில், 3-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய கேப்டன் ஹோல்டர் மற்றும் கம்மின்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கம்மின்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் பந்துகளை மட்டும் சாதுரியமாக எதிர்கொண்டு ஹோல்டருக்கு ஒத்துழைத்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஹோல்டர் ஓரளவு ரன் சேர்த்தார். 

இதன்பிறகு, ஹோல்டர் ஒரு வழியாக 39 ரன்கள் எடுத்திருந்த போது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, அடுத்த ஓவரிலேயே 45 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் இருந்த கம்மின்ஸும் ஆட்டமிழந்தார். 

இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 222 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரீத் பூம்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

75 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டம் உணவு இடைவெளி வரை விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com