சட்ட விரோதப் பணப் பரிமாற்றமும் ராணுவப் பணியும்: தோனிக்குச் சிக்கல் இல்லை!
ஆம்ராபலி தொடர்புடைய சர்ச்சைகள் தோனியின் ராணுவப் பணிக்குச் சிக்கலாக அமையாது...

ms dhoni amrapali

ms dhoni amrapali
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆம்ராபலி என்கிற கட்டுமான நிறுவனம் வீடு கட்ட மக்களிடம் பணம் வாங்கியது. ஆனால் ஒப்பந்தத்தின்படி வீடு கட்டித்தரவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இன்னொரு பக்கம், தனக்கு வழங்கவேண்டிய வீட்டையும் 2016 வரை விளம்பரத் தூதராக நடித்ததற்கான பணத்தையும் அந்நிறுவனம் தரவில்லை என தோனியும் வழக்கு தொடர்ந்தார். அந்நிறுவனம் தனக்கு ரூ. 40 கோடி வழங்கவேண்டும் என தோனி தெரிவித்திருந்தார். 2009-ல் ஆம்ராபலி, தோனியுடன் விளம்பர ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆம்ராபலி நிதி தொடர்பான தகவல்களைச் சேகரித்து அறிக்கை தர, இரண்டு பேர் கொண்ட தணிக்கையாளர்கள் குழுவை நியமித்தது.
இந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஆம்ராபலி நிறுவனம், மக்களிடம் பெற்ற 5,600 கோடி பணத்தைத் தவறாக முதலீடு செய்ய போலியாக பல நிறுவனங்களைத் தொடங்கியது தெரிய வந்தது. இதில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி இயக்குநராக உள்ள ஆம்ராபலி மகி டெவலப்பர்ஸ் நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனத்தின் 25 சதவீதப் பங்குகள் சாக்ஷி வசம் உள்ளன. மேலும் மக்களிடம் பெற்ற பணத்தைக் கொண்டு, தோனி பங்குதாரராக உள்ள ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 42.22 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இது சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் என்பதால் இந்தப் பணத்தை மீட்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. முறையான வழியில் சேவைகள் செய்து அதற்கான பணத்தை மட்டுமே பெற்றுக்கொண்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
அறிக்கையைப் பெற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆம்ராபலி குழுமத்தின் வீடு கட்டும் பணிகள் அனைத்தையும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த என்பிசிசி நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தால் ஆம்ராபலி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தையும் ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில், ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ள தோனி, பாராசூட் ரெஜிமண்டில் தங்கி பயிற்சி பெற அனுமதி தர வேண்டும் எனக் கோரியிருந்தார். அவரது கோரிக்கையைப் பரிசீலித்த ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் இதற்கு அனுமதி அளித்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தோனிக்குப் பயிற்சி தரப்பட உள்ளது. எனினும் அவர் ராணுவத்தின் தாக்குதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்ட்டுடன் சில நாள்களுக்கு முன்பு இணைந்தார் தோனி. அங்கு அவர் இரு மாத ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார். வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 15 வரை காஷ்மீரில் ராணுவக் குழுவினருடன் இணைந்து ரோந்துப் பணிக்கு தோனி செல்லவுள்ளார். காஷ்மீரில் சக வீரர்களுடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் அவர் ஈடுபடவுள்ளார். மேலும் வீரர்களுடன் இணைந்து தங்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்ராபலி வழக்கு தொடர்பாக இந்திய ராணவத்தில் பணிபுரிய தோனிக்கு எவ்வித தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னலாகத்தான் உள்ளார் தோனி. எனவே இந்திய ராணுவத்தின் விதிமுறைகள் அவருக்குப் பொருந்தாது. மேலும், அவர் தொடர்பான சர்ச்சைகள் இந்திய ராணுவத்தைப் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆம்ராபலி தொடர்புடைய சர்ச்சைகள் தோனியின் ராணுவப் பணிக்குச் சிக்கலாக அமையாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...