ரொனால்டோ,மெஸ்ஸியின் ஆதிக்கத்துக்கு சவால் விடும் விர்ஜில் வேன் ஜிக்

சர்வதேச கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தி வரும்  ஜாம்பவான்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு சவால் விடும் வகையில் சிறப்பாக ஆடி வருகிறார்
ரொனால்டோ,மெஸ்ஸியின் ஆதிக்கத்துக்கு சவால் விடும் விர்ஜில் வேன் ஜிக்

சர்வதேச கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தி வரும்  ஜாம்பவான்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு சவால் விடும் வகையில் சிறப்பாக ஆடி வருகிறார் நெதர்லாந்தின் இளம் வீரர் விர்ஜில் வேன் ஜிக்.

உலக கால்பந்தில் பீலே, மாரடோனா, ஜோஹன் கிரையர்ப், பாவ்லோ ரோஸி, பாஜியோ, டுங்கா, ரொனால்டினோ என பல்வேறு வீரர்கள் வெவ்வேறு காலங்களில் சிறப்பாக ஆடி புகழ் பெற்றனர். குறிப்பாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு பிஃபா சிறந்த வீரர் மற்றும் யுஇஎப்ஏ சிறந்த வீரர் விருதுகளையும் பெற்றனர். ஆனால் கடந்த 2007-க்கு பின் கால்பந்து உலகில் நிலைமை மாறி விட்டது.
போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி ஆகியோர் ஆதிக்கமே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடருகிறது. கடந்த 2008 முதல் 2018 வரையிலான காலத்தில் இரு வீரர்களும் பேலன் டி ஆர் எனப்படும் பிஃபா சிறந்த வீரர் விருதுகளை இருவரும் தலா 5 முறை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கால்பந்து விளையாட்டை மெஸ்ஸி, ரொனால்டோ இணைந்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு தலா 40 கோல்களை இருவரும் அடித்துள்ளனர். உலகின் முதலிரண்டு வீரர்கள் என்ற பெயர் அவர்கள் வசமே இருந்தன.
லூகா மொட்ரிக்
இந்நிலையில் கடந்த 2018 ரஷிய உலகக் கோப்பை போட்டியில் குரோஷியாவின் கேப்டன் லுகா மொட்ரிக் என்ற புதிய பெயர் அவர்களுக்கு சவாலை ஏற்படுத்தியது. மொட்ரிஸ் பேலன் டி ஆர் விருதை பெற்றார்.
புதிய சவால்
விர்ஜில் வேன் ஜிக்மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோரின் சகாப்தம் முடிவுக்கு வரும் நிலையில், நெதர்லாந்தின் இளம் வீரர் விர்ஜில் வேன் ஜிக் உருவாகி உள்ளார். நெதர்லாந்து அணி கடந்த உலகக் கோப்பையில் சிறப்பாக ஆட உதவினார்.
நெதர்லாந்தின் பிரெடாவில் கடந்த 8.7.1991-இல் பிறந்த வேன் ஜிக் உலகின் சிறந்த டிபன்டர்களில் ஒருவர் ஆவார். இங்கிலாந்தின் முன்னணி கிளப்பான லிவர்பூல் அணியில் ஆடும் விர்ஜில், நெதர்லாந்து கேப்டனாகவும் திகழ்கிறார்.
கடந்த 2013-இல் செல்டிக் அணியில் இடம் பெற்று ஸ்காட்லாந்து லீக் கோப்பையை பெற்றார்.
செளதாம்ப்டன் அணியில் சில காலம் ஆடிய நிலையில் 2018 ஜனவரியில் அதிகபட்ச தொகைக்கு லிவர்பூல் அணிக்கு இடம் பெயர்ந்தார்.
சாம்பியன்ஸ் லீக் பட்டம்
நிகழாண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இறுதிச் சுற்றில் லிவர்பூல் அணி பட்டம் வெல்ல பிரதான காரணம் விர்ஜில் ஆவார்.
கடந்த 2015-இல் நெதர்லாந்து அணியில் இடம் பெற்ற விர்ஜில் 2018-இல் கேப்டனாக நியமிக்கப்பட்டு, யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் போட்டி இறுதிச் சுற்றுக்கு முன்னேற உதவினார்.
தற்போது பிஃபா ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் முதலிடத்தில் உள்ளார் விர்ஜில். உலகம் முழுவதும் இணையதளம் மூலம் நடைபெறும் தேர்வில் அவர் தேர்வு செய்யப்படுவார் என  எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com