கோலி, ரோஹித் கருத்து வேறுபாடு விவகாரம்: சிஓஏ தலைவர் மறுப்பு

ரோஹித் ஷர்மா தற்போது அவரது மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா பக்கத்தை பின்தொடர்வதையும் நிறுத்தியுள்ளார்.
கோலி, ரோஹித் கருத்து வேறுபாடு விவகாரம்: சிஓஏ தலைவர் மறுப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடையே கருத்து வேறுபாடு வலுப்பதாக வெளியான தகவல்கள் ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்ட செய்தி மற்றும் சமூக வலைதளங்களால் பரப்பப்பட்ட வதந்தி என சிஓஏ தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாளுக்கு இரட்டைத் தலைமை முறை பின்பற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கு இடையிலான விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் எவ்வித கருத்தையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

இந்திய அணியில் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் ஏற்படுத்திய சில கட்டுப்பாடுகள் இந்த கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.

நடந்து முடிந்த உலகக் கோப்பையில் குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே வீரர்களுடன் அவர்களுடைய குடும்பத்தினர் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், ரோஹித் ஷர்மா இக்காலக்கெடுவை மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் அணித் தேர்வு மற்றும் செயல்பாடுகளிலும் உள்ள சில நடவடிக்கைகள் ரோஹித்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக அணி வட்டாரங்கள் கூறுகின்றன. 

இதனிடையே சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் விராட் கோலி பக்கத்தை ஏற்கனவே பின்தொடர்வதை நிறுத்தியிருந்த ரோஹித் ஷர்மா தற்போது அவரது மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா பக்கத்தை பின்தொடர்வதையும் நிறுத்தியுள்ளார். 

ரோஹித் ஷர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை விராட் கோலி பின்தொடர்ந்து வருகிறார். ஆனால், அவருடைய மனைவி ரித்திகா சஜ்தேஷ் பக்கத்தை பின்தொடர்வதில்லை. அதேபோன்று ரோஹித், ரித்திகா ஆகிய இருவரின் இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் அனுஷ்கா ஷர்மா பின்தொடரவில்லை. மேலும் அனுஷ்காவின் சமீபத்திய பதிவும் இந்த சர்ச்சைகளின் வெளிப்பாடு தான் எனவும் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com