மன்கட் சர்ச்சை: அஸ்வினுடன் பேச்சுவார்த்தை நடத்த ரிக்கி பாண்டிங் முடிவு!
மன்கட் முறையில் பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்வதற்கு அஸ்வின் இடம்பெற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர்...


மன்கட் முறையில் பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்வதற்கு அஸ்வின் இடம்பெற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த வருட ஐபிஎல் போட்டியின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மன்கட் முறைப்படி பஞ்சாப் கேப்டன் அஸ்வின் அவுட் செய்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒரு பவுலர் பந்துவீசுவதற்கு முன்பு ரன்னர் கிரீஸை விட்டு வெளியே சென்றால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி கிரிக்கெட்டில் உள்ளது. அதை மன்கட் முறை என அழைக்கின்றனர். இந்த முறையில் அவுட் செய்வது மிகவும் அரிதாகவே நடக்கிறது. ஏற்கெனவே மன்கட் முறையில் அவுட் செய்வது தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது. பொதுவாக கிரீஸை விட்டு நகர்ந்தால், பேட்ஸ்மேன்களுக்கு, எச்சரிக்கை தருவது பவுலர்களின் வழக்கம். அது கண்டிப்பானதில்லை. இந்நிலையில் அஸ்வினும் மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தது எனது உள்ளுணர்வு மற்றும் விதிகளின்படி தான் என அஸ்வின் கூறினார். நான் செய்தது ஆட்டத்தின் தன்மைக்கு எதிரானது என்றால் கிரிக்கெட் விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதில் ஆட்டத்தின் தன்மை எங்கே பாதிக்கப்படுகிறது. இது முன்கூட்டியே திட்டமிட்டது இல்லை. ஐசிசி விதி 41.16-இன்படி மன்கட் முறையில் அவுட் செய்யலாம். ஒருவருக்கு பொருந்தும் விதி ஏன் மற்றொருவருக்கு பொருந்தாது என்றார்.
இந்நிலையில் மன்கட் முறையில் பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்வதற்கு டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேட்டியளித்ததாவது:
கடந்த வருடம் மன்கட் முறையில் பட்லரை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தபோது என்னுடைய அணி வீரர்களிடம் நான் சொன்னேன், இதுபோல யாராவது செய்ய நினைத்தால் நாம் அதுபோன்ற ஒரு கிரிக்கெட்டை விளையாட எண்ணவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றேன். எனவே இம்முறை அஸ்வினுடன் மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன். அது மிகவும் தீவிரமாக இருக்கும் எனத் தெரியும். ஆனால் என் கருத்தை அவர் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன். விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் அதைச் செய்ததாக அஸ்வின் கூறலாம். ஆனால் கிரிக்கெட்டில் அது நியாயம் அல்ல. டெல்லி கேபிடல்ஸ் அணி அதுபோல விளையாடக் கூடாது என எண்ணுகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...