/

மே.இ. தீவுகள் அணிக்கு எதிராக வில்லியம்சன் இரட்டைச் சதம்: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 519 ரன்கள்

412 பந்துகளில் 34 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 251 ரன்கள் எடுத்த வில்லியம்சன், ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:02 pm

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டைச் சதம் எடுத்துள்ளார். 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்துள்ளது.

ஹாமில்டனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் 78 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. வில்லியம்சன் 97, டெய்லர் 31 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று ஆட்டத்தைத் தொடர்ந்த கேன் வில்லியம்சன் 224 பந்துகளில் சதமெடுத்தார். 306 பந்துகளில் 150 ரன்களை எடுத்த வில்லியம்சன், இரட்டைச் சதத்தை 369 பந்துகளில் பூர்த்தி செய்தார். இது அவருடைய 3-வது இரட்டைச் சதம். அப்போது 30 பவுண்டரிகளை அவர் அடித்திருந்தார். ஜேமிசன் வில்லியம்சனுக்கு நல்ல இணையாக அமைந்தார். 64 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

412 பந்துகளில் 34 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 251 ரன்கள் எடுத்த வில்லியம்சன், ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வில்லியம்சன் எடுத்த அதிகபட்ச ரன்கள் இது.

இதன்பிறகு 145 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன்கள் எடுத்தபோது நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. மே.இ. தீவுகள் அணியின் ரோச், கேப்ரியல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.