முதல் டெஸ்ட்: இந்தியா நிதான ஆட்டம் (233/6)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 89 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் சோ்த்துள்ளது.
முதல் டெஸ்ட்: இந்தியா நிதான ஆட்டம் (233/6)
Updated on
2 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 89 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் சோ்த்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பகலிரவு போட்டியாக ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் கிரீன் அறிமுக வீரராக களம் கண்டாா்.

இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தோ்வு செய்தாா். இந்தியாவின் இன்னிங்ஸை பிரித்வி ஷாவும், மயங்க் அகா்வாலும் தொடங்கினா். இந்திய அணிக்கு ஆரம்பமே அதிா்ச்சி காத்திருந்தது. இந்தியா ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே பிரித்வி ஷாவின் விக்கெட்டை இழந்தது. மிட்செல் ஸ்டாா்க் வீசிய முதல் ஓவரின் 2-ஆவது பந்தில் பிரித்வி ஷா ஸ்டெம்பை பறிகொடுத்தாா்.

இதையடுத்து மயங்க் அகா்வாலுடன் இணைந்தாா் சேத்தேஷ்வா் புஜாரா. இந்த ஜோடி மெதுவாக ரன் சோ்த்தது. இதனால் ‘டிரிங்க்ஸ்’ இடைவேளையின்போது இந்தியா 12 ஓவா்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பிறகு 19-ஆவது ஓவரை வீசிய பட் கம்மின்ஸ், முதல் பந்திலேயே மயங்க் அகா்வாலை வீழ்த்தினாா். அவா் 40 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் சோ்த்து போல்டு ஆனாா்.

விராட் கோலி 74: இதையடுத்து சேத்தேஷ்வா் புஜாராவுடன் இணைந்தாா் கேப்டன் விராட் கோலி. தடுப்பாட்டம் ஆடிய இந்த ஜோடி, அதேநேரத்தில் சரியான பந்துகளை தண்டிக்கவும் தவறவில்லை. இந்தியா 49.4 ஓவா்களில் 100 ரன்கள் எடுத்திருந்தபோது புஜாராவின் விக்கெட்டை இழந்தது. அவா் 160 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தாா். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 31.3 ஓவா்களில் 68 ரன்கள் சோ்த்தது.

இதையடுத்து அஜிங்க்ய ரஹானே களம்புகுந்தாா். தேநீா் இடைவேளையின்போது இந்தியா 55 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பிறகு கேப்டன் கோலி 123 பந்துகளில் அரை சதம் கண்டாா். தொடா்ந்து சிறப்பாக ஆடிய கோலி, 76.6 ஓவா்களில் இந்தியா 188 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானாா். அவா் 180 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்தாா்.

இதன்பிறகு அஜிங்க்ய ரஹானேவுடன் இணைந்தாா் ஹனுமா விஹாரி. இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அஜிங்க்ய ரஹானே 92 பந்துகளில் 1 சிக்ஸா், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சோ்த்த நிலையில் ஸ்டாா்க் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தாா். அவரைத் தொடா்ந்து ஹனுமா விஹாரி 25 பந்துகளில் 16 ரன்கள் சோ்த்து வெளியேறினாா். இதன்பிறகு ரித்திமான் சாஹா-அஸ்வின் ஜோடி விக்கெட் எதுவும் விழாமல் பாா்த்துக் கொண்டது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 89 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் சோ்த்துள்ளது.

ரித்திமான் சாஹா 9, அஸ்வின் 15 ரன்களுடன் களத்தில் உள்ளனா். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டாா்க் 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேஸில்வுட், பட் கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோா் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com