

சமீபத்தில் பிறந்த தனது குழந்தையைப் பார்க்க முடியாமல் நடராஜன் இருக்கும்போது விரைவில் பிறக்கவுள்ள குழந்தையைப் பார்க்க ஊருக்குத் திரும்புகிறார் என விராட் கோலியை முன்னாள் கேப்டன் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.
கோலி - அனுஷ்கா தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதையொட்டி, கோலி விடுப்பில் நாடு திரும்புகிறார். அவருக்குப் பதிலாக எஞ்சிய 3 டெஸ்டுகளில் அஜிங்க்ய ரஹானே கேப்டனாகச் செயல்படுகிறார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக ஒருநாள், டி20 தொடர்களில் அறிமுகமான தமிழக வீரர் நடராஜன், டெஸ்ட் தொடரில் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக உள்ளார். 2018 ஜூன் மாதம் தனது பள்ளித் தோழி பவித்ராவைத் திருமணம் செய்தார். நடராஜன் - பவித்ரா தம்பதியருக்குக் கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. எனினும் ஐபிஎல் முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார் நடராஜன். இதனால் தனது குழந்தையைப் பார்க்க அவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆங்கில நாளிதழ் ஒன்றில், முன்னாள் கேப்டன் கவாஸ்கர் எழுதியதாவது:
டி20யில் அற்புதமாக அறிமுகமானார் நடராஜன். டி20 தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற பாண்டியா அந்த விருதை நடராஜனுக்கு வழங்கினார். ஐபிஎல் பிளேஆஃப் ஆட்டங்களின் போது முதல்முறையாக தந்தை ஆனார் நடராஜன். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மிகச்சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தியதால் டெஸ்ட் தொடருக்காக அங்கே தங்க வைக்கப்பட்டார். அணியில் ஒருவராக அல்ல, வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக. ஒரு வகை ஆட்டத்தின் வெற்றியாளர், இன்னொரு வகை ஆட்டத்தில் பயிற்சிப் பந்துவீச்சாளராக உள்ளார்.
ஜனவரி மூன்றாம் வாரத்தில் டெஸ்ட் தொடர் முடிந்த பிறகே நடராஜனால் ஊருக்குத் திரும்ப முடியும். அப்போதுதான் அவரால் மகளை முதல்முறையாகக் காண முடியும். ஆனால் தன்னுடைய முதல் குழந்தை பிறப்பதைக் காண்பதற்காக முதல் டெஸ்டுக்குப் பிறகு ஊருக்குத் திரும்புகிறார் கேப்டன்.
இதுதான் இந்திய கிரிக்கெட். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதிமுறைகள். என்று எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.