மெல்போர்ன் டெஸ்ட்: ரஹானேவின் தலைமைப் பண்பு பற்றி பேச கவாஸ்கர் மறுப்பு!

ரஹானேவின் தலைமைப் பண்பு அபாரமாக இருந்தது என நான் சொன்னால்...
மெல்போர்ன் டெஸ்ட்: ரஹானேவின் தலைமைப் பண்பு பற்றி பேச கவாஸ்கர் மறுப்பு!

மும்பை வீரர்களுக்கு நான் ஆதரவு அளிப்பதாகக் கூறுவதால் ரஹானேவின் தலைமைப் பண்பு பற்றி பேச மாட்டேன் என முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. 

2-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்குச் சுருட்டிய இந்திய அணி, முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. பும்ரா 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.

இந்திய அணி முதல் நாளில் விளையாடிய விதத்தைப் பாராட்டியுள்ளார் விராட் கோலி. ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நமக்கு அற்புதமான முதல் நாள். பந்துவீச்சாளர்கள் அபாரமாக விளையாடியுள்ளார்கள். முதல் நாள் ஆட்டத்தை நன்கு முடித்துள்ளோம் என்றார். 

முதல் குழந்தை பிறக்கும்போது மனைவி அனுஷ்கா சர்மாவுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் டெஸ்டை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார் விராட் கோலி. இதனால் டெஸ்ட் தொடரின் மீதமுள்ள மூன்று டெஸ்டுகளுக்கும் ரஹானே கேப்டனாகச் செயல்படவுள்ளார்.

இந்நிலையில் சோனி தொலைக்காட்சியில் மெல்போர்ன் டெஸ்டின் முதல் நாள் பற்றி முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான கவாஸ்கர் கூறியதாவது:

உடனே ஒரு முடிவுக்கு வர வேண்டாம். ரஹானேவின் தலைமைப் பண்பு அபாரமாக இருந்தது என நான் சொன்னால் மும்பை வீரர்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் குற்றம் சொல்வார்கள். எனவே அதற்குள் நான் செல்லவில்லை. அவருடைய தலைமைப்பண்பின் ஆரம்ப நாள்கள் இவை. கடந்த இரு டெஸ்டுகள் மற்றும் சில ஒருநாள் ஆட்டங்களில் அவர் கேப்டனாக இருந்ததை வைத்துப் பார்க்கும்போது ஃபீல்டர்கள் எங்கு நிற்க வேண்டும் என்கிற அறிவு ரஹானேவுக்கு உள்ளது. ஃபீல்டர்களுக்கு ஏற்றாற்போல பந்துவீச்சாளர்களும் செயல்பட வேண்டும். இன்று நடந்தது போல பந்துவீச்சாளர்கள் பந்துவீசினால் கேப்டன் நல்லவிதமாகத் தெரிவார் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com