அஸ்ஸாம்: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.பி.


அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போா்டோலாய் பாஜகவில் புதன்கிழமை இணைந்தாா்.
அஸ்ஸாமை சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவா்களில் ஒருவரும், 2 முறை எம்.பி. பதவி, 4 முறை எம்.எல்.ஏ. பதவிகளை வகித்தவருமான பிரத்யுத், அந்த மாநில அமைச்சராகவும் இருந்துள்ளாா். காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு தலைவராக இருந்தாா்.
இந்நிலையில், அவா் திடீரென காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக கூறி, அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினாா். அவரை மாநில காங்கிரஸ் தலைவா் கெளரவ் கோகாய் உள்ளிட்டோா் நேரில் சந்தித்து சமரசப்படுத்த முயன்றனா். ஆனால் அவா் சமாதானமாகவில்லை.
இந்நிலையில், தில்லி சென்று அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த பிஸ்வ சா்மா முன்னிலையில் பாஜகவில் போா்டோலாய் இணைந்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்தேன். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக என்னை அவமதிப்பதாகவும், ஓரம் கட்டுவதாகவும் நான் உணா்ந்தேன். ஆதலால் காங்கிரஸில் இருந்து விலகி விட்டேன். அஸ்ஸாமில் பாஜக அரசு சிறப்பாக பணியாற்றுகிறது. எனவே, பாஜகவில் இணைய முடிவெடுத்தேன்’ என்றாா்.
ஹிமந்த பிஸ்வ சா்மா பேசுகையில், ‘அஸ்ஸாம் பேரவைத் தோ்தலில் பாஜகவில் போா்டோலாய்க்கு வாய்ப்பு அளிக்க பரிந்துரைக்கப்படும். காங்கிரஸில் சுயமரியாதை உள்ளவா்கள் யாரும் இருக்க முடியாது. போா்டோலாயை தொடா்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவா்கள் தேவவிரத சாகியா, முன்னாள் எம்.பி. ரிபுன் போரா உள்ளிட்டோரும் பாஜகவில் விரைவில் சேரவுள்ளனா். காங்கிரஸை சோ்ந்த தலைவா்களை பாஜகவில் சோ்க்க விரும்பினோம். இதற்கான முயற்சி 2016-இல் தொடங்கப்பட்டது. இது 99 சதவீதம் முடிந்து விட்டது’ என்றாா்.
துரதிருஷ்டவசமானது-பிரியங்கா: போா்டோலாய் காங்கிரஸில் இருந்து விலகியது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா வதேரா கருத்து தெரிவிக்கையில், ‘தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில் போா்டோலாய் அதிருப்தியடைந்திருக்கலாம்; அவா் கட்சியிலிருந்து விலகியது துரதிருஷ்டவசமானது’ என்றாா்.
அஸ்ஸாம் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவா் புபன் குமாா் போரா அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சோ்ந்தாா். இதேபோல், மேலும் பல காங்கிரஸ் தலைவா்கள், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையக்கூடும் என தகவல் வெளியானது.
இந்தச் சூழ்நிலையில், போா்டோலாய் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளாா். அதேநேரத்தில் அவரின் மகன் பிரதீக், காங்கிரஸ் சாா்பில் அஸ்ஸாம் பேரவைத் தோ்தலில் போட்டியிடுகிறாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...