கரோனா சூழல்: சிட்னி டெஸ்டுக்காக மெல்போர்னிலேயே பயிற்சி

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-ஆவது டெஸ்ட் நடைபெறவுள்ள சிட்னியில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தீவிரமாக இருப்பதால், இரு அணிகளும் தற்போதைய நிலையில் மெல்போர்னிலேயே பயிற்சியில் ஈடுபட உள்ளன. 
Updated on
1 min read

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-ஆவது டெஸ்ட் நடைபெறவுள்ள சிட்னியில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தீவிரமாக இருப்பதால், இரு அணிகளும் தற்போதைய நிலையில் மெல்போர்னிலேயே பயிற்சியில் ஈடுபட உள்ளன. 
சிட்னி டெஸ்ட் ஜனவரி 7-ஆம் தேதி தொடங்கும் நிலையில், 4-ஆம் தேதியையொட்டியே அவை அந்த நகருக்குச் செல்லவுள்ளன. 
முன்னதாக சிட்னி கடற்கரைப் பகுதிகளில் கரோனா பாதிப்பு தீவிரமானதை அடுத்து, அந்த டெஸ்ட் அங்கிருந்து மாற்றப்படலாம் என்ற பேச்சு நிலவியது. சிட்னியில் 3-ஆவது டெஸ்ட் நடைபெற்றால், 4-ஆவது டெஸ்ட் நடைபெறும் பிரிஸ்பேன் நகருக்குச் செல்வதில் சிக்கல்கள் எழுவதாகத் தெரிந்தது. 
கரோனா பாதிப்பு சூழல் காரணமாக சிட்னி அமைந்துள்ள நியூ செளத் வேல்ஸ் மாகாணத்துடனான போக்குவரத்தை துண்டிப்பதாக, பிரிஸ்பேன் நகரம் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மாகாணம் அறிவித்தது. இதனால் இரு அணியினர், போட்டி ஒளிரப்புக் குழுவினர் சிட்னியிலிருந்து பிரிஸ்பேன் செல்வதில் சிக்கல் எழலாம் எனத் தெரிந்தது. 
இதுகுறித்து குயின்ஸ்லாந்து மாகாண அரசுடன் பேச்சு நடத்தி வரும் ஆஸ்திரேலிய வாரியம், ஒருவேளை சிட்னியில் 3-ஆவது டெஸ்டை நடத்த முடியாமல் போனால், அதை மெல்போர்னில் நடத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்திருந்தது. இச்சூழலில் 3-ஆவது டெஸ்ட் உறுதியாக சிட்னியிலேயே நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. 
இந்நிலையில், ஆஸ்திரேலிய வாரியத்தின் தலைவர் தலைவர் நிக் ஹாக்லே கூறுகையில், "சிட்னியில் 3-ஆவது டெஸ்டை பாதுகாப்பாக நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இரு அணி வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் இன்னும் சில நாள்கள் மெல்போர்னிலேயே தங்கி பயிற்சி மேற்கொள்வர். டெஸ்ட் நடைபெறுவதற்கு 2 நாள்களுக்கு முன்னர் தான் அனைவரும் சிட்னி பயணிக்கவுள்ளனர். போட்டி ஒளிபரப்புக் குழுவினரும் பாதுகாப்பாக பிரிஸ்பேன் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன' என்றார். 
பொதுவாக ஆட்டம் தொடங்கும் நாளிலிருந்து சுமார் ஒரு வாரத்துக்கு முன்பே இரு அணியினரும் அந்த இடத்துக்கு சென்றுவிடுவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com