இந்திய அணி 340 ரன்கள் குவிப்பு: தவன், கோலி, ராகுல் அபார ஆட்டம்!

இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது.
இந்திய அணி 340 ரன்கள் குவிப்பு: தவன், கோலி, ராகுல் அபார ஆட்டம்!

இந்தியாவுக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. 2-வது ஒருநாள் ஆட்டம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி மீண்டும் முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் இரு மாற்றங்கள். ரிஷப் பந்துக்குப் பதிலாக மணிஷ் பாண்டேவும் ஷர்துல் தாக்குருக்குப் பதிலாக நவ்தீப் சைனியும் தேர்வாகியுள்ளார்கள். ஆஸ்திரேலிய அணியில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

ஆரம்பத்தில் விக்கெட்டுகள் விழக்கூடாது என்று வழக்கம்போல ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும் கவனமாக விளையாடினார்கள். முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது இந்திய அணி. இருவருமே நிதானமாக, கவனமாக விளையாடினார்கள். 

6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, ஸாம்பா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். அதை மேல்முறையீடு செய்து ஒரு ரெவ்யூவை வீணடித்தார் ரோஹித் சர்மா.  

கோலியுடன் இணைந்து நன்கு விளையாடினார் ஷிகர் தவன். 60 பந்துகளில் அரை சதமெடுத்தார். ஆட்டமிழப்பதற்கு முன்பு 5 ஓவர்கள் இடைவெளியில் 6 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார் தவன். சதத்தை நெருங்கியபோது ஃபைன் லெக்கில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் 96 ரன்களில் ஆட்டமிழந்தார். தவன் - கோலி ஜோடி 103 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

ஸ்ரேயஸ் ஐயர் வந்தவேகத்தில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸாம்பா அவரை போல்ட் செய்து வெளியேற்றினார். இதையடுத்து 5-ம் நிலை வீரராகக் களமிறங்கினார் கே.எல். ராகுல். வந்தது முதல் ரன்களை அழகாக எடுத்து வந்த கோலி, 50 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். ராகுல் கடகடவென பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி, 78 ரன்களில் சிக்ஸர் அடிக்க முயன்று ஸாம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே 2 ரன்களில் வெளியேறினார். 

கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்தார் ராகுல். 46-வது ஓவரில் 300 ரன்களை எட்டியது இந்திய அணி. 38 பந்துகளில் அரை சதமெடுத்த ராகுல் பிறகு கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 80 ரன்களில் ரன் அவுட் ஆனார். 

இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. ஜடேஜா 20 ரன்களுடனும் ஷமி 1 ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஆஸி. அணித் தரப்பில் ஸாம்பா 3 விக்கெட்டுகளும் ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com