மாரடோனா மறைவு: கேரளத்தில் இரு நாள் துக்கம் அனுசரிப்பு

ஆர்ஜெண்டீனாவுக்கு வெளியே அவருக்கு கேரளத்தில் தான் அதிக ரசிகர்கள் உள்ளார்கள்...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மாரடோனாவின் மறைவுக்கு கேரளத்தில் இரு நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 

ஆா்ஜெண்டீனாவைச் சோ்ந்த கால்பந்து நட்சத்திரம் டியேகோ மாரடோனா (60) மாரடைப்பால் நேற்று காலமானாா்.

மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவுக்காக சமீபத்தில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட மாரடோனா, மருத்துவமனையில் இருந்து திரும்பி 2 வாரங்களே ஆகிய நிலையில் தனது இல்லத்தில் வைத்து மாரடைப்பால் உயிரிழந்தாா். அவா் கடந்த 1960 அக்டோபா் 30-ஆம் தேதி பியூனஸ் அயா்ஸில் பிறந்தாா்.

கால்பந்து உலகின் நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்த அவா், கடந்த 1986-ஆம் ஆண்டில் ஆா்ஜெண்டீனா அணி உலகக்கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்தாா். 1990 உலகக் கோப்பை போட்டியில் அவா் பங்களிப்புடன் இறுதிச்சுற்றுவரை முன்னேறியது ஆா்ஜெண்டீனா.

மாரடோனாவின் மறைவுக்கு ஆா்ஜெண்டீனாவில் மூன்று நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் எனக் குடியரசுத் தலைவர் ஆல்பெர்டோ அறிவித்துள்ளார். 

இந்நிலையில் கால்பந்துக்கும் மாரடோனாவுக்கும் அதிக ரசிகர்களைக் கொண்ட கேரள மாநிலமும் மாரடோனாவின் மறைவுக்காக இரு நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. கேரள மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ஈ.பி. ஜெயரஞ்சன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

2012-ல் மாரடோனா, கேரளாவுக்கு வருகை தந்துள்ளார். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவுக்காக கேரளாவுக்கு வந்து, இருநாள் தங்கி ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். 

கடந்த 2017-ஆம் ஆண்டு அறக்கட்டளை ஒன்று நடத்திய கால்பந்து ஆட்டத்துக்காக மாரடோனா கொல்கத்தா வந்திருந்தார். அப்போது அவர் செளரவ் கங்குலி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடினார்.  

கேரள முதல்வர் பினராயி விஜயன், மாரடோனாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

உலகின் அழகான விளையாட்டு, கால்பந்து. அதன் புகழ்பெற்ற வீரர், மாரடோனா. ஆர்ஜெண்டீனாவுக்கு வெளியே அவருக்கு கேரளாவில் தான் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என நினைக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள மாரடோனா ரசிகர்களுடன் இணைந்து கேரளாவும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com