தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இந்தியா மீண்டும் தோல்வி: தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

​ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்திலும் தோல்வியடைந்த இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 11:54 am

DIN


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்திலும் தோல்வியடைந்த இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் சிட்னியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த ஆட்டத்திலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

டேவிட் வார்னர், பிஞ்ச் இணை இந்த ஆட்டத்திலும் நல்ல தொடக்கத்தை அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்த நிலையில் பிஞ்ச் 60 ரன்களுக்கு முகமது ஷமி வேகத்தில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே வார்னர் 83 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

இதன்பிறகு, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுஷானே இணை இந்தியப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களை விளாசியது. குறிப்பாக ஸ்மித் துரிதமாக ரன் சேர்க்க, லாபுஷானே ஒத்துழைப்பு தந்தார். இதனால், ரன் ரேட் ஓவருக்கு 6-க்கு மேல் நீடித்து வந்தது.

சிறப்பாக விளையாடிய ஸ்மித் இந்த ஆட்டத்திலும் சதமடித்தார்.

Story image

62 பந்துகளில் சதமடித்த அவர் 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாண்டியாவிடம் வீழ்ந்தார்.

இதையடுத்து, லாபுஷானேவும் அரைசதம் அடித்து துரிதமாக விளையாடினார். குறிப்பாக கிளென் மேக்ஸ்வெல் கடைசி கட்டத்தில் மீண்டும் ஒரு அதிரடி ஆட்டம் விளையாட அந்த அணியின் ஸ்கோர் கடந்த ஆட்டத்தில் எடுத்த ஸ்கோரையும் தாண்டியது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். லாபுஷானே ஜாஸ்பிரீத் பூம்ரா வீசிய 49-வது ஓவரில் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

390 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இந்த இணை இந்த முறையும் அதிரடியான தொடக்கத்தைத் தந்தாலும், அதைப் பெரிய பாட்னர்ஷிப்பாக மாற்றவில்லை. முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் தவான் (23 பந்துகள் 30 ரன்கள்) ஜோஷ் ஹேசில்வுட் ஓவரில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து, அகர்வால் 28 ரன்களுக்கு பேட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, கேப்டன் விராட் கோலி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் பாட்னர்ஷிப் அமைத்தனர். பெரிய பாட்னர்ஷிப்பாக மாற்றுவதற்காக தொடக்கத்தில் பொறுமை காட்டி படிப்படியாக ஸ்கோரை உயர்த்தினர். அதிரடி பாட்னர்ஷிப்பாக மாற வேண்டிய சமயத்தில் ஸ்டீவ் ஸ்மித்தின் அசத்தல் கேட்ச்சால் ஷ்ரேயஸ் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.

இதன்பிறகு, கோலியுடன் துணை கேப்டன் கேஎல் ராகுல் இணைந்தார். இவர்களும் பாட்னர்ஷிப் அமைத்தனர். அரைசதம் அடித்து விளையாடி வந்த கோலி சதத்தை நெருங்கிய நேரம் ஹென்ரிகஸ்ஸின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். கோலி 87 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, ராகுலுடன் ஹார்திக் பாண்டியா இணைந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 12-ஐத் தொட்டது. இருவரும் அதிரடி காட்ட முனைப்பு காட்டினாலும், சரியான டைமிங் கிடைக்காமல் திணறினர். இதனால், 13-ஐத் தாண்டியது வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்.

ராகுல் அரைசதம் அடித்தாலும், அதிரடிக்கு மாற முயற்சித்து 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களுக்கு 87 ரன்கள் தேவை என்ற நிலை இருந்ததால், அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா வந்த வேகத்தில் சிக்ஸர்களும், பவுண்டரியும் அடித்து விளையாடினார். எனினும் அவர் 11 பந்துகளில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே பாண்டியா 31 பந்துகளில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஷமி 1, பூம்ரா 0 அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் மற்றும் ஆடம் ஸாம்பா தலா 2 விக்கெட்டுகளும், ஹென்ரிகஸ் மற்றும் மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.