ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்று வங்கதேசம் சாதனை

இதற்கு முன்பு எந்தவொரு தொடரிலும் ஆஸ்திரேலியாவை வங்கதேசம் வென்றதில்லை.
கேப்டன் மஹ்முதுல்லா (கோப்புப் படம்)
கேப்டன் மஹ்முதுல்லா (கோப்புப் படம்)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை வென்று டி20 தொடரைக் கைப்பற்றி சாதனை செய்துள்ளது வங்கதேச அணி.

இதற்கு முன்பு எந்தவொரு தொடரிலும் ஆஸ்திரேலியாவை வங்கதேசம் வென்றதில்லை. மேலும் டி20 தொடரில் முதல்முறையாக வங்கதேசத்துடன் மோதுகிறது ஆஸ்திரேலியா. இதற்கு முன்பு நான்கு முறை டி20 உலகக் கோப்பையில் மட்டுமே இரு அணிகளும் மோதியுள்ளன. இந்நிலையில் ஆஸி. அணியுடன் மோதிய முதல் டி20 தொடரிலேயே வங்கதேச அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

முதல் இரு டி20 ஆட்டங்களில் தோல்வியடைந்த ஆஸி. அணிக்கு மீதமுள்ள மூன்று ஆட்டங்களிலும் வெல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. டாக்காவில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்கதேச அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. கேப்டன் மஹ்முதுல்லா 52 ரன்கள் எடுத்தார். ஆஸி. அணியின் அறிமுக வீரர் நாதன் எல்லீஸ் ஹாட்ரிக் எடுத்தார்.  பிறகு விளையாடிய ஆஸி. அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மிட்செல் மார்ஷ் மீண்டும் சிறப்பாக விளையாடி 51 ரன்கள் எடுத்தார். வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டும் கொடுத்து அசத்தினார். 

முதல் டி20யில் 108 ரன்களும் 2-வது டி20யில் 121/7 ரன்களும் எடுத்தது ஆஸி அணி. 3-வது டி20யிலும் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி அணிக்குத் தோல்வியைத் தேடித் தந்துள்ளார்கள். (இந்தத் தொடரில் பிரபல ஆஸி. வீரர்களான டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீஸ் ஸ்மித் போன்றோர் கலந்துகொள்ளவில்லை)

5 ஆட்டங்களில் டி20 தொடரில் 3-0 என முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது வங்கதேச அணி. 

சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 1-4 எனத் தோற்றது ஆஸ்திரேலியா. அடுத்ததாக வங்கதேசத்திடமும் தோல்வியடைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com