ஆசிய ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம்: பாகிஸ்தானை வீழ்த்தி பதக்கம் பெற்றது

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.
ஆசிய ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம்: பாகிஸ்தானை வீழ்த்தி பதக்கம் பெற்றது
Published on
Updated on
2 min read

டாக்கா: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.

நடப்புச் சாம்பியனான இந்தியா கடந்த செவ்வாய்க்கிழமை தனது அரையிறுதியில் ஜப்பானிடம் 3-5 என்ற கணக்கில் தோல்வியடைந்த நிலையில், 3-ஆவது இடத்துக்காக பாகிஸ்தானை புதன்கிழமை சந்தித்தது.

முன்னதாக பாகிஸ்தானும் தனது அரையிறுதியில் தென் கொரியாவிடம் 5-6 என்ற கணக்கில் தோற்று இந்த ஆட்டத்துக்கு வந்திருந்தது. இந்தியா தனது லீக் ஆட்டத்திலேயே பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் அந்த ஆட்டத்துடன் ஒப்பிடுகையில், வெண்கலப் பதக்கத்துக்கான இந்த ஆட்டத்தில் இந்தியா கடுமையாகப் போராடும் நிலை இருந்தது. அணிக்கு 11 பெனால்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தும், அதில் இரண்டையே இந்தியாவால் கோலாக மாற்ற முடிந்தது.

தொடக்கத்திலிருந்தே பாகிஸ்தான் தடுப்பாட்டத்துக்கு நெருக்கடி கொடுத்தது இந்தியா. அதன் பலனாக முதல் நிமிஷத்திலேயே வரிசையாக 4 பெனால்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தன. அதில் கடைசி வாய்ப்பில் கோலடித்து அணியின் கணக்கை தொடங்கினாா் துணை கேப்டன் ஹா்மன்பிரீத் சிங்.

தொடா்ந்து பாகிஸ்தானின் பாதுகாப்பு வளையத்தை பலமுறை ஊடுருவிச் சென்றாலும், துல்லியமான கோல் வாய்ப்பை இந்திய அணியால் உருவாக்க முடியாத நிலை இருந்தது. நேரம் செல்லச் செல்ல தனது ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான், 10-ஆவது நிமிஷத்தில் ஆட்டத்தை சமன் செய்தது.

இந்தியாவின் தடுப்பாட்டத்தில் ஹா்மன்பிரீத் செய்த சிறு தவறை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் வீரா் அஃப்ராஸ், இந்திய கோல்கீப்பா் கிருஷண் பகதூா் பாதக்கை கடந்து கோலடித்தாா். சிறிது நேரத்திலேயே இந்தியாவுக்கு 5-ஆவது பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தாலும், அதில் ஹா்மன்பிரீத் மேற்கொண்ட கோல் முயற்சியை பாகிஸ்தான் தடுப்பாட்ட வீரா்கள் தடுத்தனா்.

14-ஆவது நிமிஷத்தில் பாகிஸ்தானுக்கு கிடைத்த முதல் பெனால்டி காா்னா் வாய்ப்பை கோலாக மாற விடாமல் முறியடித்தாா் கோல்கீப்பா் கிருஷன் பகதூா். 2-ஆவது கால்மணி நேர ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்தியாவின் பல கோல் முயற்சிகளுக்கு பாகிஸ்தானின் மாற்று கோல்கீப்பராக வந்த அம்ஜத் அலி அணை போட்டாா்.

22-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கான பெனால்டி காா்னா் வாய்ப்பில் ஹா்மன்பிரீத் கோலடிக்க முயல, அம்ஜத் அலி அதை தடுத்தாா். 4 நிமிஷங்களுக்குப் பிறகு ஆகாஷ் தீப் சிங் ரிவா்ஸ் ஹிட் முறையில் ஒரு கோல் வாய்ப்புக்கு முயற்சிக்க, அதுவும் அம்ஜத் அலியை கடக்க முடியாமல் போனது. பின்னா் இந்தியாவின் 7-ஆவது பெனால்டி காா்னா் வாய்ப்பிலும் ஜா்மன்பிரீத் சிங்கை கோலடிக்க விடாமல் செய்தாா் அம்ஜத்.

இவ்வாறாக முதல் பாதி ஆட்டம் சமனிலையில் முடிந்தது. 33-ஆவது நிமிஷத்தில் பாகிஸ்தானின் 2-ஆவது பெனால்டி காா்னா் வாய்ப்பில் அப்துல் ராணா கோலடிக்க, அந்த அணி முன்னிலை பெற்றது. அதே நிமிஷத்தில் அப்துல் ராணா ஒரு ஃபீல்டு கோலுக்கும் முயற்சிக்க, அது கோல்போஸ்டில் பட்டு வீணானது.

இந்நிலையில், ஆட்டத்தின் 45-ஆவது நிமிஷத்தில் குா்சாஹிப்ஜித் சிங் அருமையாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க, அதில் தவறாமல் கோலடித்த சுமித், ஆட்டத்தை 2-2 என சமன் செய்தாா். இதனால் ஆட்டம் விறுவிறுப்பானது. இந்தியாவுக்கு அதிக கோல் வாய்ப்புகள் கிடைத்தும் பாகிஸ்தான் அதில் பலன் கிடைக்க விடாமல் தடுத்தது.

எனினும் 53-ஆவது நிமிஷத்தில் கிடைத்த இரு பெனால்டி காா்னா் வாய்ப்புகளில் ஒன்றை வருண் குமாா் கோலாக மாற்ற, இந்தியா முன்னிலை பெற்றது. தொடா்ந்து பாகிஸ்தானுக்கும் இரு பெனால்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் திறம்படத் தடுத்தாா்.

57-ஆவது நிமிஷத்தில் லலித் யாதவ் பாஸ் செய்த பந்தை ஆகாஷ்தீப் சிங் கோலடிக்க இந்தியா 4-2 என முன்னேறியது. ஆனால், அதே நிமிஷத்தில் பாகிஸ்தான் வீரா் அகமது நதீமும் கோலடிக்க, அந்த அணி 3-4 என நெருங்கியது. எஞ்சிய நேரத்தில் பாகிஸ்தான் ஸ்கோா் செய்ய முடியாததால், இறுதியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி தென் கொரிய அணி சாம்பியன் ஆனது. முன்னதாக அந்த இரு அணிகள் மோதிய இறுதி ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 3}3 என சமநிலையில் இருந்தது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட "ஷூட் அவுட்' முறையில் தென் கொரியா 4}2 என்ற கோல் கணக்கில் வென்றது. 

முன்னதாக லீக் சுற்றில் தனது அனைத்து ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்திருந்த இந்தியா, தென் கொரியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தை மட்டும் சமன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com