மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

சென்னை ஆடுகளத்தால் இந்திய அணிக்கு மூன்று அபராதப் புள்ளிகள் விதிக்கப்படுமா?

சென்னை ஆடுகளம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

News image
Updated On :16 பிப்ரவரி 2021, 5:13 am

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-ஆவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இதன் ஆடுகளத்தால் இந்திய அணிக்குச் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

சென்னையில் தொடங்கிய 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் நீக்கம் செய்யப்பட்டார். பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அக்‌ஷர் படேல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இந்த டெஸ்டுக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 

இந்தியா முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி, 59.5 ஓவர்களில் 134 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் அஸ்வின் சதத்துடன் 286 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 429 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதனால் 2-வது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் சென்னை ஆடுகளம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. முதல் நாள், முதல் பகுதியிலிருந்தே சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக ஆடுகளம் உள்ளதால் பேட்ஸ்மேன்கள் ஸ்டிரோக்குகளை வெளிப்படுத்த திணறுகிறார்கள். ரோஹித் சர்மா, அஸ்வின், கோலி, ரஹானே, ரிஷப் பந்த் என சிலர் மட்டுமே சவாலை எதிர்கொண்டு அதிக ரன்கள் எடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் டெஸ்ட் முடிந்த பிறகு சென்னை ஆடுகளம் மோசம் என போட்டி நடுவரால் சான்றிதழ் வழங்கப்பட்டால் அது இந்திய அணிக்குச் சிக்கலை ஏற்படுத்தும். ஐசிசி விதிமுறைகளின்படி ஆடுகளத்துக்கு மோசம் எனச் சான்றிதழ் வழங்கப்பட்டால் உள்ளூர் அணிக்கு மூன்று அபராதப் புள்ளிகள் விதிக்கப்படும். இதனால் போட்டி நடுவரான ஜவகல் ஸ்ரீநாத் என்ன மாதிரியான முடிவை வழங்கவுள்ளார் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளிகள் பட்டியலில் 430 புள்ளிகளுடன் இந்திய அணி 4-ம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தை 2-1, 3-1 என வென்றால் மட்டுமே இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியும். ஒருவேளை சேப்பாக்கம் ஆடுகளத்தால் 3 அபராதப் புள்ளிகள் விதிக்கப்பட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.