'விதிமுறைக்கு கட்டுப்பாட்டால் மட்டும் வாருங்கள்': இந்திய அணிக்கு குயின்ஸ்லாந்து அரசு எச்சரிக்கை

கரோனா பாதுகாப்பு வளைய விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும், இல்லையெனில் குயின்ஸ்லாந்துக்கு வர வேண்டாம் என இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு குயின்ஸ்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கரோனா பாதுகாப்பு வளைய விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும், இல்லையெனில் குயின்ஸ்லாந்துக்கு வர வேண்டாம் என இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு குயின்ஸ்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் குயின்ஸ்லாந்து தலைநகர் பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், நவ்தீப் சைனி உள்ளிட்டோர் பாதுகாப்பு வளையத்தை மீறியதாக எழுந்த புகாரையடுத்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதுகுறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளால் தேர்வு செய்யப்பட்ட குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் ஹாஸ் பேட்ஸ் தெரிவிக்கையில், "இந்தியர்களால் விதிமுறைகளைப் பின்பற்ற முடியாவிட்டால் அவர்கள் வர வேண்டாம்" என்றார்.

அதேசமயம், இந்திய வீரர்கள் பிரிஸ்பேனில் மீண்டும் ஒரு தனிமைப்படுத்துதலை விரும்பவில்லை.

இதுபற்றி இந்தியக் கிரிக்கெட் அணியிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தது:

"நாங்கள் சிட்னிக்கு வரும் முன் துபையில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டோம். அதன்பிறகு, சிட்னியில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டோம். அதாவது நாங்கள் சுமார் ஒரு மாதம் கடுமையான தனிமைப்படுத்துதலில் இருந்துள்ளோம். அதனால், சுற்றுப்பயணத்தின் இறுதியில் நாங்கள் மீண்டும் ஒரு தனிமைப்படுத்துதலை விரும்பவில்லை. மைதானத்துக்கு செல்வதைத் தவிர்த்து மற்ற நேரங்களில் விடுதியிலேயே இருக்க வேண்டும் என்றால் நாங்கள் பிரிஸ்பேன் செல்ல விரும்பவில்லை.

வேறு ஒரு நகரத்தில் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களையும் விளையாடி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சுமார் 6 மாதங்களாக வீரர்கள் அனைவரும் வெவ்வேறு முறையிலான பொது முடக்கம் மற்றும் கரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இருந்துள்ளோம். அது யாருக்கும் அவ்வளவு எளிதானதல்ல என்றுதான் நாங்கள் கூறுகிறோம்."

இதனால், ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெறுவது கேள்விக்குள்ளாகியுள்ளது.

இதுகுறித்து காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் கூறியது:

"நான் இதுகுறித்து (பிரிஸ்பேனில் விளையாட இந்திய வீரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது) இன்னும் கேள்விப்படவில்லை. ஆனால், சிட்னி மைதானத்திலேயே அடுத்தடுத்த ஆட்டங்கள் விளையாடுவதை நாங்கள் (ஆஸ்திரேலிய வீரர்கள்) விரும்பமாட்டோம். மைதானத்துக்கு மட்டுமே சென்று விடுதிக்கு திரும்ப வேண்டும் என்பது போன்ற தனிமைப்படுத்தப்பட்ட விடுதியாக இருந்தாலும் நாங்கள் அட்டவணைப்படி விளையாடுவதையே விரும்புவோம்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அட்டவணையில் உறுதியாக இருக்கிறது. அதனால், பிரிஸ்பேனில் விளையாடுவதை முழுமையாக எதிர்பார்க்கிறோம். பிரிஸ்பேனில் விளையாட எங்களுக்குப் பிடிக்கும் என்பதில் எந்த ரகசியமும் இல்லை."

பிரிஸ்பேனில் இந்திய அணி ஒரு டெஸ்ட் ஆட்டத்தில்கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com