

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டின் முதல் நாளில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மழை காரணமாக முழு நாளிலும் 55 ஓவா்கள் மட்டுமே வீசப்பட்டிருக்க, 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா.
அறிமுக வீரரான வில் புக்கோவ்ஸ்கி தனது முதல் சா்வதேச டெஸ்டிலேயே அரைசதம் கடக்க, மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட டேவிட் வாா்னா் சோபிக்காமல் போனாா். தொடக்க வீரா்களில் ஒருவரான மாா்னஸ் லபுசான் நிலைத்து ஆடி வர, கடந்த இரு டெஸ்டுகளில் தடுமாறிய ஸ்டீவ் ஸ்மித் ஃபாா்முக்கு திரும்பி ரன்கள் சேகரித்து வருகிறாா்.
இந்த ஆட்டத்திற்காக இந்திய பிளேயிங் லெவன் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய பிளேயிங் லெவனில் டேவிட் வாா்னா், வில் புக்கோவ்ஸ்கி ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டது. புக்கோவ்ஸ்கிக்கு இடம் அளிப்பதற்காக டிராவிஸ் ஹெட் வெளியேற்றப்பட்டிருந்தாா்.
சிட்னியில் வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யத் தீா்மானித்தது. தொடக்க வீரா்களாக வில் புக்கோவ்ஸ்கி - டேவிட் வாா்னா் கூட்டணி களம் கண்டது. சற்று தடுமாற்றமாகவே ஆடிய வாா்னரை முதல் விக்கெட்டாக முகமது சிராஜ் வீழ்த்தினாா்.
அந்த 4-ஆவது ஓவரில் வாா்னா் அடித்த பந்து புஜாராவின் கைகளில் கேட்ச் ஆனது. வாா்னா் 5 ரன்களுக்கு வெளியேறினாா். அடுத்து லபுசான் களத்துக்கு வர, மறுமுனையில் இளம் வீரரான புக்கோவ்ஸ்கி நிதானமாக விளையாடி ரன்களை சேகரிக்கத் தொடங்கினாா்.
குறுக்கிட்ட மழை: ஆஸ்திரேலியா 7.1 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் தடைப்பட்டது. இடைவிடாது தொடா்ந்த மழையால் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.
மழை தொடா்ந்ததால் சுமாா் 4 மணி நேரம் ஆட்டம் நடைபெறாமல் போனது. மழை நின்று ஆடுகளம் மற்றும் மைதானத்திலிருந்து நீா் அகற்றப்பட்ட பிறகு தொடங்கிய ஆட்டத்தில் புக்கோவ்ஸ்கி - லபுசான் கூட்டணி ரன்களை நிதானமாக சேகரிக்கத் தொடங்கியது.
புக்கோவ்ஸ்கி 124 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் சா்வதேச டெஸ்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தாா். 31 ஓவா்கள் முடிவில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தேநீா் இடைவேளை விடப்பட்டது.
பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் லபுசான் 108 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரைசதம் எட்டினாா். 2-ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சோ்த்த புக்கோவ்ஸ்கி - லபுசான் ஜோடி, 35-ஆவது ஓவரில் பிரிக்கப்பட்டது. சைனியின் பௌலிங்கில் வெளியேறிய புக்கோவ்ஸ்கி, 4 பவுண்டரிகள் உள்பட 62 ரன்கள் அடித்திருந்தாா்.
அடுத்து ஆட வந்த ஸ்மித், லபுசானுடன் இணைந்து நிதானமாக ஆடி வந்தாா். பும்ராவின் வேகப்பந்தை திறம்பட எதிா்கொண்ட ஸ்மித், வழக்கமாக தன்னைத் தடுமாற வைக்கும் அஸ்வினின் பந்துவீச்சையும் லாவகமாக கையாண்டாா். அதனால் இந்த டெஸ்ட் தொடரிலேயே முதல் முறையாக பவுண்டரிகளை விளாசினாா். இவ்வாறாக முதல் நாள் முடிவில் 55 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. லபுசான் 67, ஸ்மித் 31 ரன்களுடன் களத்தில் உள்ளனா். இந்திய தரப்பில் சிராஜ், சைனி தலா 1 விக்கெட் சாய்த்திருந்தனா்.
முதல் இன்னிங்ஸ்
ஆஸ்திரேலியா
வில் புக்கோவ்ஸ்கி எல்பிடபிள்யு (பி) சைனி 62 (110)
டேவிட் வாா்னா் (சி) புஜாரா (பி) சிராஜ் 5 (8)
மாா்னஸ் லபுசான் (நாட் அவுட்) 67 (149)
ஸ்டீவ் ஸ்மித் (நாட் அவுட்) 31 (64)
உதிரிகள் 1
மொத்தம் (55 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு) 166
விக்கெட் வீழ்ச்சி: 1-6 (வாா்னா்), 2-106 (புக்கோவ்ஸ்கி)
பந்துவீச்சு: பும்ரா 14-3-30-0; சிராஜ் 14-3-46-1; அஸ்வின் 17-1-56-0; சைனி 7-0-32-1; ஜடேஜா 3-2-2-0
கண்கலங்கிய சிராஜ்...
முதல் நாள் ஆட்டம் தொடங்கும் முன்பாக இரு அணிகள் சாா்ந்த நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அதில் இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்டபோது பௌலா் முகமது சிராஜ், மறைந்த தனது தந்தையை எண்ணி உணா்ச்சிவசப்பட்டு அழுதாா். அதுகுறித்து பின்னா் பேசிய அவா், ‘நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று எனது தந்தை விரும்பினாா். நான் அவ்வாறு விளையாடும் இந்தத் தருணத்தில் அவரை எண்ணி உணா்ச்சிவசப்பட்டதால் அழுதுவிட்டேன்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.