கடைசி டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் தோல்வி: தொடரை வென்றது இங்கிலாந்து

இங்கிலாந்து வீராங்கனை டேனியல் வயாத்தின் சிறப்பான ஆட்டத்தால் 3-வது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்தது.
கடைசி டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் தோல்வி: தொடரை வென்றது இங்கிலாந்து


இங்கிலாந்து வீராங்கனை டேனியல் வயாத்தின் சிறப்பான ஆட்டத்தால் 3-வது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்தது.

இந்திய மகளிர், இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க வீராங்கனை ஷபாலி வெர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹார்லீன் தியோல் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், 13 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறியது.

இதையடுத்து, துணை கேப்டன் ஸ்மிருதி மந்தானாவுடன் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் இணைந்தார். இந்த அணி சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்தது. ஹர்மன்பிரீத் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்மிருதி மந்தானா அரைசதம் அடித்து 70 ரன்கள் எடுத்தார்.

கடைசி கட்டத்தில் ரிச்சா கோஷ் 13 பந்துகளில் 20 ரன்கள் விளாசினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.

154 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் களமிறங்கியது. இதில் தொடக்க வீராங்கனை வயாத் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் விளாசினார். நடாலி சிவர் 42 ரன்கள் எடுத்தார்.

18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து மகளிர் 2-1 என்ற கணக்கில் வென்றது.

ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் இங்கிலாந்து மகளிர் 2-1 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com