
2012-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க வேண்டும் என்பது கனவாக இருந்ததாக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சோ்ந்த பவானி தேவி, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வாள்வீச்சு போட்டியாளா் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதனிடையே இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் அவர் பேசியதாவது, ''விளையாட்டு எனக்குள் கேளிக்கையாகத்தான் ஆரம்பித்தது. விளையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாவேன். எனது முதல் போட்டியில் நான் வெற்றி பெறவில்லை. எனது நண்பர்கள் வெற்றி பெற்றனர். அந்த நிகழ்வுதான் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாட வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்தது. மாவட்ட அளவிலிருந்து தேசிய அளவிலான போட்டிகளுக்கும் என்னைக் கொண்டுசென்றது.
2012-ம் ஆண்டு முதலே இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. ஆனால் அந்தக் கனவை எப்படி அடைவது என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் அந்தக் காலகட்டத்தில் வாள்வீச்சுப் போட்டி தற்போது உள்ள அளவிற்குக் கூட இந்தியாவில் பிரபலமாக இல்லை.
ஆரம்ப காலகட்டத்தில் போட்டிகளுக்கு பணத்தை தயார் செய்வது கடினமாக இருந்தது. எனக்குத் தேவையான அனைத்தையும் நானே செய்துகொண்டேன். ஆரம்பகாலத்தில் எனது குடும்பம் மட்டுமே உதவியது. எனினும் குறிப்பிட்டு வழிநடத்த யாரும் இல்லை.
எனினும் 2015-ம் ஆண்டு முதல் பலதரப்பிலிருந்து உதவிகள் கிடைக்க ஆரம்பித்தது. விளையாட்டு கூட்டமைப்பிற்கும் அரசு நிதியுதவி அளித்ததால், டோக்கியோ ஒலிம்பிக் கனவை நோக்கி தயாராக ஆரம்பித்தேன்.
இத்தாலி வாள்வீச்சு பயிற்சியாளருடன் ஒலிம்பிக் குறித்து பேசுவேன். அதற்கு தயாராகும் திட்டங்கள் குறித்து என்னிடம் அவர் உரையாடுவார். ஆரம்பம் முதலே அனுபவம் குறைவாக உள்ளதாக பயிற்சியாளர் சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பார்.
நான் என்னைவிட வயது குறைந்தவர்களுடன் விளையாடுவதில்லை. எனக்கு வயதில் மூத்தவர்களுடனேயே அதிகம் விளையாடியிருக்கிறேன். அதனால் அவர்களுக்கு இணையாக போட்டியிட அதிகம் உழைப்பை செலுத்தவேண்டியிருந்தது.
இதனால் எனது மற்ற போட்டியாளர்களை விட அதிகமாக பயிற்சி மேற்கொள்வேன். ஆனால் தற்போது எனது இலக்கை எட்டியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பல்வேறு வழிகளில் கிடைத்த உதவிகளின் மூலம் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது.
இந்த இலக்கை என்னால் தனித்து அடைந்திருக்க முடியாது. எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அரசு செய்த உதவியால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது. ஏனெனில் அரசு சார்பில் அனைத்துவித விளையாட்டுகளும் தற்போது ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
ஒலிம்பிக் போட்டியில் அனைத்து இந்தியர்களும் எனது போட்டியை காண்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. போட்டியில் எனது சிறந்த பங்களிப்பை நான் அளிப்பேன்'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.