பி.டி. உஷாவும் பயிற்சியாளர் நம்பியாரும்: நினைவுகளை மீட்டெடுக்கும் புகைப்படங்கள்
By DIN | Published On : 20th August 2021 01:05 PM | Last Updated : 20th August 2021 01:05 PM | அ+அ அ- |

சர்வதேசப் போட்டிகளில் பி.டி. உஷா பதக்கங்களைப் பெற உதவிய பயிற்சியாளர் ஓ.எம். நம்பியார் காலமானார். அவருக்கு வயது 89.
பிரபல தடகள வீராங்கனையாக இருந்த பி.டி. உஷா, 1986 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் 400 மீ. தடை ஓட்டத்தில் நான்காம் இடம் பிடித்து நூலிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார்.
ஒரு விளையாட்டு விழாவில் 13 வயது பி.டி. உஷாவைக் கண்ட பயிற்சியாளர் ஓ.எம். நம்பியார், அவருடைய திறமைகளைக் கண்டறிந்து பயிற்சியளிக்க ஆரம்பித்தார். கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த நம்பியாரிடம் பயிற்சி எடுக்க ஆரம்பித்த ஒரே வருடத்தில் மாநிலங்களுக்கிடையிலான ஜூனியர் போட்டியில் ஆறு பதக்கங்களை வென்றார் பி.டி. உஷா. அவர் சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்று பல சாதனைகளை நிகழ்த்த முக்கியக் காரணமாக இருந்ததால் 1985-ல் துரோணாச்சார்யா விருது அறிமுகம் செய்யப்பட்டபோது விருது வாங்கிய மூவரில் ஒருவராக நம்பியார் இருந்தார்.
இந்திய விமானப் படையில் 15 வருடங்கள் பணியாற்றினார் நம்பியார். 1970-ல் அங்கிருந்து ஓய்வு பெற்று கேரள ஸ்போர்ட்ஸ் கவுன்சிலில் இணைந்தார். தடகள வீரராக இருந்தும் சர்வதேச அளவில் சாதிக்க முடியாததால் பயிற்சியாளராக மாறி இந்தியாவுக்கு பி.டி. உஷா என்கிற அற்புதமான திறமைசாலியை உருவாக்கினார். நம்பியாரின் அறிவுரைப்படியே லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் 400 மீ. தடை ஓட்டத்தில் பங்கேற்றார் பி.டி. உஷா. ஷைனி வில்சன், வந்தனா ராவ் போன்ற வீராங்கனைகளின் சாதனைகளிலும் முக்கியப் பங்காற்றினார் நம்பியார். இந்த வருடம் மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியது.
என்னுடைய குருவை இழந்துவிட்டேன். இதனால் என் வாழ்க்கையில் உண்டாகும் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. என் வாழ்க்கையில் அவருடைய பங்களிப்பை வார்த்தைகளால் விளக்க முடியாது. நான் வேதனையில் உள்ளேன் என்று நம்பியாரின் மறைவுக்கு பி.டி. உஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...