கோலி அவுட்டா இல்லையா, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்: பிசிசிஐ வெளியிட்ட விடியோ

மும்பை டெஸ்டில் கோலியின் விக்கெட்டினால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து காணொளி வெளியிட்டுள்ளது பிசிசிஐ.
கோலி அவுட்டா இல்லையா, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்: பிசிசிஐ வெளியிட்ட விடியோ

மும்பை டெஸ்டில் கோலியின் விக்கெட்டினால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து காணொளி வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

மும்பை டெஸ்டில் விராட் கோலியின் விக்கெட் பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. கடந்த சில நாள்களாகப் பெய்த மழை காரணமாக ஆட்டம் மதியம் 12 மணிக்குத் தொடங்கியது. 

27-வது ஓவரின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இதன்பிறகு யாரும் எதிர்பாராதது நடந்தது.

சுழற்பந்து வீச்சை நன்கு விளையாடி வந்த ஷுப்மன் கில்லை 44 ரன்களில் வெளியேற்றினார் அஜாஸ் படேல். தனது அடுத்த ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் புஜாராவை டக் அவுட் செய்தார் அஜாஸ் படேல். இதன்பிறகு களமிறங்கினார் விராட் கோலி.

அந்த ஓவரின் கடைசிப் பந்தில் கோலியை எல்பிடபிள்யூ செய்தார் அஜாஸ் படேல். டக் அவுட் ஆன கோலி நடுவரின் முடிவை எதிர்த்து டிஆர்எஸ் முறையீடு செய்தார். பந்து முதலில் பேட்டில் பட்டதா அல்லது கால் காப்பில் (pad) பட்டதா என்பது தெளிவாகத் தெரியாத நிலையில் நடுவரின் முடிவை மாற்ற முடியாது என 3-ம் நடுவர் அறிவித்தார். இதில் அதிர்ச்சியடைந்த கோலி, கள நடுவரிடம் விளக்கம் கேட்டார். பிறகு கோபத்துடன் ஓய்வறைக்குச் சென்றார்.  

கோலிக்குக் கள நடுவர் அவுட் கொடுத்ததாலும் அந்த முடிவை மாற்றும் அளவுக்குப் போதிய ஆதாரங்கள் காணொளியில் இல்லாததாலும் 3-வது நடுவர் வேறு வழியின்றி கோலியை அவுட் என அறிவித்தார். 

கோலியால் இந்த முடிவை ஏற்க முடியவில்லை. இதனால் கள நடுவரிடம் சில நொடிகள் விளக்கம் கேட்டு, அந்தப் பதிலுக்குத் திருப்தியடையாமல் வெளியேறினார். எல்லைக்கோடு அருகே சென்றவுடன் பேட்டால் ஓங்கி தரையை அடித்தார். பிறகு அணியின் பயிற்சியாளர் அருகில் நின்று நடுவரின் முடிவுக்குத் தனது அதிருப்தியைத் தெரிவிக்கும் விதத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

3-வது நடுவரின் முடிவைக் கண்டு ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். மும்பை டெஸ்ட் நடுவர்களை விமர்சனம் செய்து பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள். கள நடுவரின் முடிவைப் பற்றி கவலைப்படாமல் குழப்பம் நிலவிய அந்தக் காணொளியைக் கொண்டு சந்தேகத்தின் பலனை கோலிக்கு வழங்கி தொடர்ந்து விளையாடும்படி 3-வது நடுவர் அறிவித்திருக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

இந்நிலையில் விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தது தொடர்பான காணொளியைத் தனது இணையத்தளத்தில் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கோலி அவுட்டா இல்லையா, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று அந்தக் காணொளிக்குத் தலைப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com