இந்தியா போல விளையாடி ஜெயிக்க வேண்டும்: ஆஷஸ் தொடர் பற்றி ஜேம்ஸ் ஆண்டர்சன்

முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோதும் பிறகு மீண்டு வந்து டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது.
இந்தியா போல விளையாடி ஜெயிக்க வேண்டும்: ஆஷஸ் தொடர் பற்றி ஜேம்ஸ் ஆண்டர்சன்

முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோதும் பிறகு மீண்டு வந்து டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. அதுபோல இங்கிலாந்து அணியும் முதல் டெஸ்ட் தோல்வியிலிருந்து மீண்டு வந்து ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்லவேண்டும் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2020-21 டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என வென்று ஆச்சர்யப்படுத்தியது. பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோற்றது. எனினும் மீதமுள்ள 3 டெஸ்டுகளில் 2-ல் வெற்றி பெற்று ஒரு டெஸ்டைப் போராடி டிரா செய்து நம்பமுடியாத வகையில் டெஸ்ட் தொடரை வென்றது. 

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் எழுதிய கட்டுரையில் கூறியதாவது:

இந்திய அணி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் மீண்டு வந்து (ஆஸ்திரேலியாவுக்கு எதிரான) டெஸ்ட் தொடரை வென்றார்கள். எனவே இது நடக்க வாய்ப்புண்டு. நிலைமையை மாற்றி, பேட்டிங்கில் நாங்கள் செய்த தவறுகளைச் சரி செய்து, கடின உழைப்பைச் செலுத்தும் நேரமிது. பிரிஸ்பேனில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. மீண்டும் இப்படித்தான் விளையாடுவோம் என ஊரில் நினைக்கலாம். ஆனால் இம்முறை முடிவுகள் வேறாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்குச் சமீபத்தில் வந்த அணிகளை விடவும் இங்கிலாந்து அணி மேலானது. ஆஸ்திரேலியாவைத் தோற்கடிக்க முடியும் என்பதை அறிந்துள்ளோம் என்றார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஆஸி. அணி எளிதாக வென்றது.

2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. ஆஷஸ் தொடரில் நடைபெற்ற 335 டெஸ்டுகளில் 136-ல் ஆஸ்திரேலியாவும் 108-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 91 டெஸ்டுகள் டிரா ஆகியுள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது.

2-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நாளை (டிசம்பர் 16) நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com