ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்திய ஹாக்கி அணி (கோப்புப் படம்)
இந்திய ஹாக்கி அணி (கோப்புப் படம்)

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொண்டது. 

முதல் ஆட்டத்தில் தென் கொரியாவுடன் டிரா செய்திருந்த இந்தியா, 2-வது ஆட்டத்தில் வங்கதேசத்தை 9-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானுடன் டிரா செய்தது. 

பெனால்டி கார்னர் வழியாக ஹர்மன்ப்ரீத் சிங் கோலடித்து முன்னிலை பெற உதவினார். முதல் பாதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது. இதன்பிறகு ஆகாஷ்தீப் சிங் ஒரு கோலடித்தார். அடுத்ததாக 45-வது நிமிடத்தில் பாகிஸ்தானின் மன்சூர் ஒரு கோலடித்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, ஆட்டம் முடிய 7 நிமிடங்கள் இருந்தபோது பெனால்டி கார்னரில் மேலும் ஒரு கோலடித்து 3-1 என பாகிஸ்தானை வீழ்த்தியது. 

இன்று கிடைத்த 3 பெனால்டி கார்னர்களில் இந்திய அணி, ஹர்மன்ப்ரீத் சிங்கின் உதவியுடன் 2 கோல்களை அடித்து அசத்தியது. பாகிஸ்தான் அணி தனக்குக் கிடைத்த 2 பெனால்டி கார்னர்களையும் வீணடித்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது. புள்ளிகள் பட்டியலில் 3 ஆட்டங்களில் 7 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது இந்தியா. 2 ஆட்டங்கள் விளையாடிய பாகிஸ்தான் அணி, 1 புள்ளியை மட்டும் பெற்றுள்ளது. 

ஆசிய விளையாட்டுப் போட்டி சாம்பியன் ஜப்பானுடன் டிசம்பர் 19 அன்று மோதுகிறது இந்திய அணி. டிசம்பர் 21 அன்று அரையிறுதி ஆட்டமும் அடுத்த நாள் இறுதி ஆட்டமும் நடைபெறவுள்ளன. 

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியை இந்திய அணி மூன்று முறை வென்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com