ஓவர்கள் வீச கூடுதல் நேரம்: மேலும் 3 புள்ளிகளை இழந்த இங்கிலாந்து அணி!
By DIN | Published On : 18th December 2021 11:23 AM | Last Updated : 18th December 2021 11:23 AM | அ+அ அ- |

இங்கிலாந்து அணி
ஆஷஸ் முதல் டெஸ்டில் ஓவர்களை வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் மேலும் 3 புள்ளிகளை இழந்துள்ளது இங்கிலாந்து அணி.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஆஸி. அணி எளிதாக வென்றது. 2-வது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்டில் ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இங்கிலாந்து அணி 5 புள்ளிகளை இழந்தது. தாமதமாக வீசப்பட்ட ஒவ்வொரு ஓவருக்கும் 1 புள்ளி என 5 புள்ளிகளை இழந்தது. இந்நிலையில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 8 ஓவர்கள் குறைவாக வீசியதைத் தற்போது அறிந்துள்ளது ஐசிசி. இதையடுத்து கூடுதலாக 3 புள்ளிகளைச் சேர்த்து 8 புள்ளிகளை இங்கிலாந்து இழந்துள்ளதாக ஐசிசி தற்போது அறிவித்துள்ளது. இதையடுத்து 2021-23 பருவத்தில் 5 டெஸ்டுகளில் 6 புள்ளிகளை மட்டுமே எடுத்துள்ளது இங்கிலாந்து அணி. இதனால் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளது. வெற்றி சதவீதம் 10%. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இதே சிக்கல் காரணமாகப் புள்ளிகளை இழந்தது இங்கிலாந்து அணி. இதுவரை ஓவர்களைக் குறைவாக வீசிய காரணத்துக்காக 10 புள்ளிகளை இழந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒவ்வொரு டெஸ்ட் வெற்றிக்கும் 12 புள்ளிகளும் டிராவுக்கு 4 புள்ளிகளும் டை ஆட்டத்துக்கு 6 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. தோல்வியடைந்தால் எந்தவொரு புள்ளியையும் இழக்கவேண்டியதில்லை.