டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தெ.ஆ. வீரர் டி காக் திடீர் ஓய்வு: காரணம் என்ன?

வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் உங்களால் வாங்க முடியும், காலத்தைத் தவிர...
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தெ.ஆ. வீரர் டி காக் திடீர் ஓய்வு: காரணம் என்ன?

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார். தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் டி காக்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த டெஸ்டில் தெ.ஆ. விக்கெட் கீப்பர் டி காக் இரு இன்னிங்ஸிலும் 34, 28 ரன்கள் எடுத்தார். 

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார் டி காக். 29 வயதில் இந்த முடிவை அவர் எடுத்திருப்பது கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. டி காக்கின் மனைவிக்கு விரைவில் முதல் குழந்தை பிறக்கவுள்ளது. இதனால் 2-வது மற்றும் 3-வது டெஸ்டுகளில் இருந்து டி காக் ஏற்கெனவே விலகிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஓய்வு அறிவிப்பு குறித்த அறிக்கையில் டி காக் கூறியதாவது:

இந்த முடிவை நான் அவ்வளவு சுலபமாக எடுக்கவில்லை. வாழ்க்கையில் எது முக்கியம் என்கிற முடிவினால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். நானும் என் மனைவி சாஷாவும் எங்களுடைய முதல் குழந்தையை விரைவில் வரவேற்கவுள்ளோம். எனக்கு என் குடும்பம் தான் எல்லாமுமாக உள்ளது. எங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் விருப்பமானது. இப்போது அதைவிடவும் நான் விரும்பும் ஒன்று உள்ளது. வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் உங்களால் வாங்க முடியும், காலத்தைத் தவிர. எனக்கு முக்கியமானவர்களுக்காக என் நேரத்தைச் செலவிட விரும்புகிறேன். தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடுவது இத்துடன் முடியவில்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பங்கேற்பேன். அனைவரையும் ஒருநாள், டி20 தொடர்களில் சந்திக்கிறேன் என்றார். 

2021-ம் வருடத்தின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்க அணியின் தற்காலிக டெஸ்ட் கேப்டனாக இருந்தார் டி காக். இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கினார். 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் டி காக்கை முன்வைத்து பெரிய சர்ச்சை ஏற்பட்டது. கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க மறுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் டி காக் விலகினார். இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். சில நாள்கள் மெளனத்துக்குப் பிறகு தனது விளக்கத்தை அவர் தெரிவித்தார். அறிக்கையில் டி காக் கூறியதாவது:

இனப்பாகுபாடுக்கு எதிரான நடவடிக்கையாக மண்டிடுவதன் மூலம் மற்றவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்றால் அதை மகிழ்ச்சியுடன் செய்ய விரும்புகிறேன். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நான் விளையாடாததால் யாரையும் அவமதிக்க விரும்பவில்லை. என்னுடைய குடும்பத்திலும் பல்வேறு இனத்தவர்கள் உள்ளார்கள். என் சகோதரிகள் கலப்பினத்தைச் சேர்ந்தவர்கள். என் வளர்ப்புத் தாய் கருப்பினத்தவர். எனவே நான் பிறந்ததிலிருந்தே, கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்பதை அறிந்தவன். சர்வதேச இயக்கத்துக்காக அதை அறிந்தவன் அல்லன். இந்த விவாதம் முன்பே நடைபெற்றிருக்கலாம். ஆட்ட நாளன்று நடந்ததைத் தவிர்த்திருக்கலாம். நான் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதை ஏற்கிறேன். இதற்கு முன்பு, அவரவர் விருப்பப்படி நடந்துகொள்ளலாம் என்றார்கள். என்னுடைய தினசரி வாழ்க்கையில் அனைவரையும் நேசித்து வாழும் நான் எதற்காக சைகையின் மூலம் என் உணர்வை வெளிப்படுத்த வேண்டும்? இது எனக்குப் புரியவில்லை. எந்த ஒரு விவாதமும் இன்றி என்ன செய்யவேண்டும் என்று சொல்லும்போது அதன் அர்த்தத்தை இழப்பதாக எண்ணினேன். தவறான புரிதலால் இனவெறியாளர் எனும்போது அது என்னை மிகவும் காயப்படுத்துகிறது. என் குடும்பத்தையும் கர்ப்பமாக உள்ள என் மனைவியையும் காயப்படுத்தியுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பே இதைச் சரி செய்திருக்க வேண்டும். இதனால் நாட்டுக்கு வெற்றி தேடித்தரவேண்டிய பணியில் கவனம் செலுத்தியிருப்போம் என்றார். 

அடுத்து நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அனைவருடைய கவனமும் டி காக்கின் மீது இருந்தது. கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு எந்த விதத்தில் தனது ஆதரவை வெளிப்படுத்துவார் என்று. ஆட்டம் தொடங்கும் முன்பு, மற்ற வீரர்களுடன் இணைந்து மண்டியிட்டு, கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கான தனது ஆதரவை டி காக் வெளிப்படுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com