20 நிமிடம் தாமதமாகியிருந்தால் மூச்சுக்குழாய் வெடித்திருக்கும்: பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அதிர்ச்சித் தகவல்

அரையிறுதியில் விளையாடக்கூடிய அளவுக்கு இன்னும் குணமாகவில்லை. அப்படி விளையாடினால் ஆபத்து ஏற்படலாம் என்றார்.
20 நிமிடம் தாமதமாகியிருந்தால் மூச்சுக்குழாய் வெடித்திருக்கும்: பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அதிர்ச்சித் தகவல்

டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போது உடல்நலக்குறைவால் ஏற்பட்ட அனுபவங்களை பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் பகிர்ந்துள்ளார். 

டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை ஆஸ்திரேலியா வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வான், 67 ரன்கள் எடுத்தார். 

அரையிறுதி ஆட்டத்துக்கு முன்பு பாகிஸ்தானின் முக்கிய வீரர்களான முகமது ரிஸ்வானும் சோயிப் மாலிக்கும் சளிக்காய்ச்சலால் அவதிப்பட்டார்கள். இருவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா இல்லை எனத் தெரிய வந்தது. பயிற்சியில் பங்கேற்பதைத் தவிர்த்தார்கள். இதனால் அரையிறுதி ஆட்டத்தில் இருவரும் பங்கேற்பார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. இறுதியில், உடற்தகுதித் தேர்வில் ரிஸ்வானும் மாலிக்கும் தேர்ச்சி அடைந்து அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்றார்கள்.

பாகிஸ்தான் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் இரு நாள்கள் ஐசியூவில் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகே அரையிறுதியில் கலந்துகொண்டார். பாகிஸ்தான் அணியின் மருத்துவர் நஜீபுல்லா சூம்ரோ, இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நவம்பர் 9 அன்று ரிஸ்வானுக்கு நெஞ்சுப் பகுதியில் கிருமித் தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ.) இரு இரவுகளைக் கழித்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். விரைவில் குணமாகி அரையிறுதியில் விளையாடத் தகுதியடைந்தார். அணிக்காக விளையாடுவதில் ரிஸ்வான் உறுதியாக இருந்தார் என்றார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 6 ஆட்டங்களில் 281 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்தார் ரிஸ்வான்.

இந்நிலையில் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்பு தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது பற்றி ரிஸ்வான் ஒரு பேட்டியில் கூறியதாவது:

மருத்துவமனை சென்றபோது என்னால் மூச்சுவிட முடியவில்லை. என்னுடைய மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதாக செவிலியர் சொன்னார். என்னிடம் வேறு எதுவும் சொல்லவில்லை. காலையில் எனக்குச் சரியாகிவிடும், அதற்குப் பிறகு அணியினருடன் இனைந்துகொள்ளலாம் என்றார்கள். மாலையில் மருத்துவமனையிலிருந்து அனுப்புவதாக மதியம் சொன்னார்கள். இதனால் செவிலியரிடம் கேட்டேன், 20 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் மூச்சுக்குழாய் வெடித்திருக்கும். எனவே இரு இரவுகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டும் என்றார். அரையிறுதியில் விளையாடக்கூடிய அளவுக்கு இன்னும் குணமாகவில்லை என மருத்துவர் பிறகு கூறினார். இதனால் நான் வேதனையடைந்தேன். அப்படி விளையாடினால் ஆபத்து ஏற்படலாம் என்றார். நல்லவேளையாக விரைவில் குணமாகி அரையிறுதியில் விளையாடினேன் என்றார். 

துபையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் சஹீர், முகமது ரிஸ்வானுக்குச் சிகிச்சை மேற்கொண்டார். அரையிறுதியில் விளையாடும் அளவுக்கு ரிஸ்வான் உடற்தகுதியை அடைந்ததால் இந்திய மருத்துவரின் திறமையான சிகிச்சைக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட டி ஷர்ட் ஒன்றை சஹீருக்கு வழங்கியுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com