இந்திய அணியின் வலைப்பயிற்சியில் இணைந்த வாஷிங்டன் சுந்தர்: காரணம் என்ன?

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், இந்திய அணியின் வலைப்பயிற்சியில் இணைந்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தர் (கோப்புப் படம்)
வாஷிங்டன் சுந்தர் (கோப்புப் படம்)

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், இந்திய அணியின் வலைப்பயிற்சியில் இணைந்துள்ளார்.

இங்கிலாந்தில் இருந்தபோது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகினார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் பங்கேற்காமல் நாடு திரும்பினார். 

இதன்பிறகு சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான தமிழக அணியில் வாஷிங்டன் சுந்தரின் பெயர் இடம்பெற்றிருந்தது. காயத்திலிருந்து அவர் குணமடைந்துவிட்டதாகக் கூறப்பட்டது. 

காயத்திலிருந்து முழுமையாகக் குணமாகாததால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகினார். பெங்களூரில் நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் வாஷிங்டன் சுந்தருக்கு உடற்தகுதி சோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் நான்கு வாரங்கள் ஓய்வெடுத்தால் மட்டுமே காயத்திலிருந்து குணமடைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடும் அளவுக்கு இன்னும் முழு உடற்தகுதியை வாஷிங்டன் சுந்தர் அடையவில்லை. உடனடியாக விளையாடவேண்டும் என அவசரப்பட வேண்டாம் என அப்போது என்.சி.ஏ.வின் தலைவராக இருந்த ராகுல் டிராவிட் கூறியதால் இம்முடிவு எடுக்கப்பட்டது. வாஷிங்டன் சுந்தரால் பேட்டிங் செய்ய முடியும் என்றாலும் பந்துவீசுவதில் இன்னும் சில சிரமங்கள் உள்ளதால் கூடுதலாக ஓய்வெடுக்க வேண்டும் என்று நேஷனல் கிரிக்கெட் அகாதெமி அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் சிலர், மும்பையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் வாஷிங்டன் சுந்தரும் இணைந்துள்ளார். நேற்று நடைபெற்ற வலைப்பயிற்சியில் வாஷிங்டன் பந்துவீசவோ, பேட்டிங் செய்யவோ முயலவில்லை. அடிப்படை ஃபீல்டிங் பயிற்சிகளில் மட்டும் ஈடுபட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறுவார் என்பதால் அதற்கு முன்பு முழு உடற்தகுதியை அடைய தற்போது இந்திய அணியினருடன் இணைந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் வாஷிங்டன் சுந்தர்.  

இதுவரை விளையாடிய நான்கு டெஸ்டுகளில் 3 அரை சதங்களுடன் 265 ரன்களும் 6 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார் வாஷிங்டன் சுந்தர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com