குகேஷ் அடுத்து விளையாடவுள்ள செஸ் போட்டி எது?

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை அடுத்து பிரபல செஸ் வீரர் குகேஷ் விளையாடும் செஸ் போட்டி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
குகேஷ் அடுத்து விளையாடவுள்ள செஸ் போட்டி எது?
Published on
Updated on
2 min read

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை அடுத்து பிரபல செஸ் வீரர் குகேஷ் விளையாடும் செஸ் போட்டி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. தமிழக அரசு, சா்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) சாா்பில் ரூ.100 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம் ஃபோா் பாயிண்ட் ஷெரட்டன் ஹோட்டலில் கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கியது. ஓபன் பிரிவில் 187, மகளிா் பிரிவில் 162 நாடுகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. 

ஓபன் பிரிவில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்ற இந்திய பி அணி வெண்கலம் வென்றது. மகளிர் பிரிவில் நிறைமாத கா்ப்பிணி ஹரிகா, கொனேரு ஹம்பி, ஆா். வைஷாலி, பக்தி குல்கா்னி, தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்ற இந்திய ஏ அணி வெண்கலம் வென்றது. 

விளையாட்டு வீரா்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபா் பதக்கங்களில் இந்திய இளம் வீரா்கள் டி. குகேஷ், நிஹல் சரின் ஆகியோா் தங்கம் வென்றனா். ஏ அணி வீரா் அா்ஜுன் எரிகைசி வெள்ளியும் பி அணி வீரா் பிரக்ஞானந்தா வெண்கலமும் வென்றனா். மகளிா் பிரிவில் தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக், ஆா்.வைஷாலி ஆகியோர் வெண்கலம் வென்றனா்.

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடிய 11 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்ற குகேஷ், இரு ஆட்டங்களை டிரா செய்து ஓர் ஆட்டத்தில் மட்டும் தோல்வியடைந்தார்.  செஸ் ஒலிம்பியாட் போட்டிக்குப் பிறகு குகேஷ் கலந்துகொள்ளும் போட்டிகள் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 

செஸ் தரவரிசையில் 2700 புள்ளிகளைக் குறைந்த வயதில் அடைந்த இந்திய வீரர் என்கிற பெருமையைச் சமீபத்தில் அடைந்தார் 16 வயது குகேஷ். உலகளவில் 3-வது இளம் வீரர். 2019-ல் இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் (12 வயது) என்கிற சாதனையைப் படைத்தார் குகேஷ். உலகளவில் 2-வது இடம். 2700 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த குகேஷுக்குப் பிரபல செஸ் வீரர்களான கார்ல்சனும் விஸ்வநாதன் ஆனந்தும் பாராட்டு தெரிவித்தார்கள். 

ஒலிம்பியாட் போட்டியின் முடிவில் குகேஷின் செஸ் ஈஎல்ஓ தரவரிசை 2725.2 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து இந்தியாவின் நெ.2 வீரராக முன்னேறியுள்ளார். இதற்கு முன்பு தரவரிசையில் முன்னிலையில் இருந்த விதித் குஜ்ராத்தி, ஹரிகிருஷ்ணாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியாவின் புதிய நெ.2 வீரராக முன்னேறியுள்ளார் குகேஷ். விஸ்வநாதன் ஆனந்த் (2756) உலகளவில் 12-ம் இடத்திலும் குகேஷ் 24-ம் இடத்திலும் (2725.2) உள்ளார்கள்.

கடந்த 5 வருடங்களில் முதல்முறையாக இந்தியாவின் சிறந்த மூன்று வீரர்களில் ஆனந்த், ஹரி கிருஷ்ணா, விதித் ஆகிய மூவரைத் தவிர மற்றொருவராக குகேஷ் இடம்பெற்றுள்ளார். 

இந்நிலையில் சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்குப் பிறகு ஓய்வில்லாமல் உடனடியாக அடுத்தப் போட்டியில் பங்கேற்கிறார் குகேஷ். ஆகஸ்ட் 15 முதல் தொடங்கும் டர்கிஷ் லீக் சர்வதேசப் போட்டியில் பங்கேற்கிறார். இதுகுறித்த தகவலை அவருடைய பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். குகேஷ் இனிமேல் ஓபன் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றும் தரவர்சைக்கு ஏற்றாற்போல லீக் போட்டிகளில் கலந்துகொள்வது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கொல்கத்தாவில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 4 வரை டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் குகேஷ், பிரக்ஞானந்தா போன்ற தமிழக வீரர்கள் கலந்துகொள்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com