மெஸ்ஸி அற்புதம்: இறுதிச்சுற்றில் ஆர்ஜென்டீனா! (கோல்கள் விடியோ)

கத்தார் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் குரோசியாவை 3-0 என வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது ஆர்ஜென்டீனா.
மெஸ்ஸி அற்புதம்: இறுதிச்சுற்றில் ஆர்ஜென்டீனா! (கோல்கள் விடியோ)

கத்தார் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் குரோசியாவை 3-0 என வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது ஆர்ஜென்டீனா.

கால்பந்து உலகக் கோப்பை முதல் அரையிறுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா - குரோசியா அணிகள் மோதின. உலகக் கோப்பையில் இதற்கு முன்பு ஆர்ஜென்டீனாவும் குரோசியாவும் இரு முறை மோதியதில் 1998-ல் ஆர்ஜென்டீனா 1-0 என வென்றது. 2018-ல் குரோசியா 3-0 என வென்றது. இரு அணிகளும் முதல்முறையாக நாக் அவுட் சுற்றில் போட்டியிட்டன. 2018-ல் 2-ம் இடம் பிடித்தது குரோசியா அணி. இம்முறை காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதி என இரு நாக் அவுட் ஆட்டங்களிலும் பெனால்டி வழியாகவே வென்றது. காலிறுதியில் இரு அணிகளும் பெனால்டி வழியாகவே வெற்றி பெற்றன.

35 வயது மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை. 2014-ல் இறுதிச்சுற்றில் தோற்றதால் இம்முறை தனது அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தரும் முனைப்பில் அவர் உள்ளார். 

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்த ஆட்டத்தில் இருமுறை உலகக் கோப்பையை வென்ற ஆர்ஜென்டீனா சிறப்பாக விளையாடியது. 34-வது நிமிடத்தில் பெனால்டி வழியாக முதல் கோலை அடித்து ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தார் மெஸ்ஸி. இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி அடித்த 5-வது கோல் இது. உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தமாக 11 கோல்களை அடித்துள்ளார். உலகக் கோப்பையில் அதிக கோல்களை அடித்த ஆர்ஜென்டீனா வீரர் என்கிற பெருமையையும் பெற்றார். உலகக் கோப்பையில் 19 கோல்களில் அவருடைய பங்களிப்பு இருந்துள்ளது (11 கோல்கள், 8 உதவிகள்).

5 நிமிடங்கள் கழித்து ஆர்ஜென்டீனாவின் ஆல்வரெஸ் ஒரு கோலடித்து 2-0 என முன்னிலையை அதிகப்படுத்தினார். கடைசியாக மெஸ்ஸியின் உதவியால் ஆல்வரெஸ் மற்றொரு கோலடித்தார். 3-0 என அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது ஆர்ஜென்டீனா. 

மெஸ்ஸியின் ஆட்டத்தை இறுதிச்சுற்றில் காண வாய்ப்பு கிடைத்துள்ளதால் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதிச் சுற்றில் பிரான்ஸ் - மொராக்கோ அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com