ரஞ்சி கோப்பை: குழந்தைக்கு அடுத்ததாகத் தந்தையை இழந்தும் தொடர்ந்து விளையாடிய வீரர்

அணியின் நலனே முக்கியம் என்று முடிவெடுத்த சோலாங்கிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
படம் - www.instagram.com/vishi270/
படம் - www.instagram.com/vishi270/
Published on
Updated on
2 min read

இரு வார இடைவெளியில் பெண் குழந்தை, தந்தை என இருவரை இழந்தபோது ரஞ்சி கோப்பைப் போட்டியில் தொடர்ந்து விளையாடியுள்ளார் பரோடா வீரர் விஷ்ணு சோலாங்கி. 

29 வயது சோலாங்கி, இதுவரை 25 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 6 சதங்களுடன் 1679 ரன்கள் எடுத்துள்ளார். 2020-21 சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் ஹரியாணாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் கடைசி 3 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து (6,4,6) பரோடா அணிக்குப் பரபரப்பான முறையில் வெற்றியை அளித்தார். 46 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்தார். 

கடந்த பிப்ரவரி 11 அன்று கட்டாக்கில் பரோடா அணியினருடன் கரோனா தடுப்பு விளையத்தில் சோலாங்கி இருந்தபோது அவருடைய மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்த தகவல் கிடைத்தது. ஆனால் பிப்ரவரி 12 அன்று நள்ளிரவில், முந்தைய நாள் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக ஊருக்கு விரைந்தார் சோலாங்கி. இதனால் பெங்கால் அணிக்கு எதிரான பரோடா அணியின் முதல் ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. 

ஊருக்குச் சென்ற சோலாங்கி, அடுத்த 5-வது நாளில் மீண்டும் அணியினருடன் இணைந்தார். சண்டிகருக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் விளையாடத் தயாராக இருந்தார். தனது மகளை உயிருடன் ஏந்த வாய்ப்பு கிடைக்காத துயர நிலையிலும் அணிக்காகப் பங்களிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 5 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு சண்டிகருக்கு எதிராக விளையாடி ஆட்டத்தில் சதமடித்தார் சோலாங்கி. 

நேற்று, சோலாங்கிக்கு இன்னொரு துயரச் செய்தி கிடைத்தது. காலை 8 மணி அளவில் சோலாங்கியின் தந்தை இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. 75 வயதான சோலாங்கியின் தந்தை, உடல்நலக் குறைவால் கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆட்டத்தின் கடைசி நாள் என்பதால் தந்தை இறந்த செய்தி கிடைத்தும் உடனடியாகக் கிளம்ப சோலாங்கி விரும்பவில்லை. ஓய்வறைக்கு வந்து தந்தையின் இறுதிச்சடங்குகளை அலைபேசி வழியாகப் பார்த்தார். ஆட்டத்தின்போது அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தபோதும் நிலைமை கருதி சோலாங்கிக்கு மட்டும் அனுமதி வழங்கினார் ஆட்ட நடுவர். 

இரு வாரங்களில் பெண் குழந்தை, தந்தை என இருவரையும் சோலாங்கி இழந்ததால் நேற்றைய ரஞ்சி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினார்கள். மைதானத்தில் வீரர்களும் ஆட்ட நடுவர்களும் இரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினார்கள். 

தந்தை இறந்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சொந்த ஊருக்குக் கிளம்ப சோலாங்கிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மார்ச் 3 அன்று தொடங்கும் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடி முடித்த பிறகே சொந்த ஊருக்குச் செல்லவுள்ளதாக சோலாங்கி தெரிவித்தார். ஊருக்குச் சென்றால் மீண்டும் திரும்பி வந்தாலும் அவரால் கடைசி ஆட்டத்தில் பங்கேற்க முடியாது. சதமடித்து நல்ல ஃபார்மில் உள்ள வீரர், அடுத்த ஆட்டத்தில் விளையாடாமல் போனால் அது அணிக்குப் பாதகமாக அமையும்  என்பதால் சோலாங்கி இந்த முடிவை எடுத்தார்.

குரூப் பி பிரிவில் உள்ள பரோடா அணி இதுவரை விளையாடிய இரு ஆட்டங்களிலும் ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது. 

குடும்பத்தில் உள்ள நெருக்கமான இரு சொந்தங்களை இழந்தபோதும் அணியின் நலனே முக்கியம் என்று முடிவெடுத்த சோலாங்கிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். அணியின் நிஜ வீரன் என்று ரசிகர்கள் உள்பட பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com