அதிரடியாக விளையாடிய இந்திய பேட்டர்கள்: ரோஹித் சர்மா சொல்லும் காரணம்

இந்திய பேட்டர்களின் ஸ்டிரைக் ரேட். ரோஹித் சர்மா - 171.42, தீபக் ஹூடா - 194.11, சூர்யகுமார் யாதவ் - 205.26
தீபக் ஹூடா
தீபக் ஹூடா

இங்கிலாந்துக்கு எதிராக அதிரடியாக விளையாடியது குறித்து பதில் அளித்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

செளதாம்ப்டனில் நடைபெற்ற பகலிரவு ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடினார்கள். ரோஹித் சர்மா 24, ஹூடா 33, சூர்யகுமார் யாதவ் 39 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியாவும் அபாரமாக பேட்டிங் செய்து 33 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. ஜார்டன், மொயீன் அலி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து கேப்டன் பட்லரை முதல் பந்திலேயே அற்புதமான பந்தால் போல்ட் செய்தார் புவனேஸ்வர் குமார். இங்கிலாந்து அணி முதல் 6 ஓவர்களில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பாண்டியா பந்துவீச்சிலும் திறமையாகச் செயல்பட்டு விக்கெட்டுகள் எடுத்தார். 10 ஓவர்களின் முடிவில் 72/4 என இருந்ததால் நெருக்கடியை எதிர்கொண்டது இங்கிலாந்து. 13-வது ஓவரில் ஹேரி புரூக், மொயீன் அலி என நன்கு விளையாடி வந்த பேட்டர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் சஹால். கடைசியில் இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாண்டியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது.

இந்திய அணி முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மாவும் தீபக் ஹூடாவும் பவர்பிளே ஓவர்களை நன்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதன்பிறகு பாண்டியாவும் விரைவாக ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் இந்திய பேட்டர்களின் ஸ்டிரைக் ரேட். ரோஹித் சர்மா - 171.42, தீபக் ஹூடா - 194.11, சூர்யகுமார் யாதவ் - 205.26, பாண்டியா - 154.54, அக்‌ஷர் படேல் - 141.66, தினேஷ் கார்த்திக் - 157.14.

அதிரடியாக விளையாடும் இந்த உத்தி குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

இதுகுறித்து நிறைய விவாதித்துள்ளோம். குறிப்பிட்ட அணுகுமுறையில் விளையாட வேண்டும் என எண்ணுகிறோம். இப்படி விளையாடும்போது சில நேரம் சரியாக வரும், சில நேரம் சரியாக வராது. ஆனால் இதேபோல மீண்டும் மீண்டும் விளையாட நினைக்கவேண்டும். இது சவாலானது. தினமும் இதேபோல விளையாடுவது கடினமானது. இதுபற்றி விவாதித்துள்ளதால் எல்லா வீரர்களும் அதேபோலவே விளையாடியாக வேண்டும். ஓரிரு வீரர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பேட்டிங் குழுவும் நாம் எப்படி விளையாட வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டில் எங்கள் வீரர்கள் தெளிவாக உள்ளார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com