ஃபார்முக்கு திரும்புவாரா விராட் கோலி ? முன்னாள் விக்கெட் கீப்பரின் சிலிர்க்க வைக்கும் பதில்..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மனம் திறந்துள்ளார்.
ஃபார்முக்கு திரும்புவாரா விராட் கோலி ? முன்னாள் விக்கெட் கீப்பரின் சிலிர்க்க வைக்கும் பதில்..!
Published on
Updated on
2 min read

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மனம் திறந்துள்ளார்.

இன்னும் 2 மாதங்களில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் விளையாடி வரும் ஒவ்வொரு தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அணியில் உள்ள இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளனர். ஆனால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ரன் மெஷின் என அறியப்படும் விராட் கோலி உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 

கிரிக்கெட் உலகில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயங்களில் ஒன்று விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம். விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து கலவையான விமர்சனங்கள் தினசரி வந்த வண்ணமே உள்ளது. சிலர் விராட் கோலிக்கு ஆதரவு அளித்தும், சிலர் அவருக்கு அறிவுரை கூறியும் வருகின்றனர். 

கடந்த 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கடைசியாக விராட் கோலி சதம் அடித்திருந்தார். அதன் பின் இது நாள் வரை அவரால் இந்த 2 ஆண்டு இடைவெளியில்  ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை. அவரது பேட்டிங்கிலும் பெரிய அளவில் அவர் சிறப்பாக விளையாடவில்லை.

சமீபத்தில், இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அந்தத் தொடரில் கோலியின் பேட்டிங் பெரிதாக சொல்லும் அளவுக்கு இல்லை. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மாற்றியமைக்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே  11 மற்றும் 20 ரன்களை மட்டுமே அவர் குவித்தார். அதன் பின் விளையாடிய 2 டி20 போட்டிகளிலும் சேர்த்து அவர் வெறும் 12 ரன்கள் மட்டுமே குவித்தார். மேலும், இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 25 பந்துகளை சந்தித்த விராட் கோலி 16 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து தொடரில் ஃபார்முக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விராட் கோலியின் பேட்டிங் அவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என்ற விமர்சனத்தை மேலும் அதிகப்படுத்தியது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சையது கிர்மானி விராட் கோலிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “ விராட் கோலி ஒரு முன்மாதிரி. அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவர் உலகக் கோப்பை டி20 அணியின் ஒரு அங்கமாக கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர் எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு திரும்பலாம். அவர் ஃபார்முக்கு திரும்பும் அந்த நாள் ஆட்டத்தின் போக்கை மாற்ற வல்லவராக இருப்பார். அதனால், அவரைப் போன்ற அனுபவம் மிகுந்த வீரர்கள் அணியில் இருக்க வேண்டும். அவரிடமிருந்து இளம் வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.

இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் சமமான அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான் அணி சமநிலையில் பலமானதாக இருக்கும். இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையான போட்டி நிலவி வருகிறது. விராட் கோலியின் இடத்தில் வேறு ஏதாவது ஒரு வீரர் இருந்திருந்தால் அவருடைய இடம் அணியில் இருந்து எப்போதோ போயிருக்கும். என்னைப் பொறுத்தவரை விராட் கோலி ஒரு சிறந்த வீரர் அவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும்” என்றார்.

சையது கிர்மானி 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com