

இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னை.
இந்தியாவிலுள்ள 74 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
விதை, விஸ்வநாதன் ஆனந்த் போட்டது.
1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டராக ஆனார் விஸ்வநாதன் ஆனந்த். அதன்பிறகு தான் இந்தியாவில் செஸ் குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகமானது.
முதல் கிராண்ட்மாஸ்டருக்கு அடுத்ததாக 2-வது கிராண்ட்மாஸ்டர் கிடைக்க மூன்று வருடங்கள் ஆகின. 1991-ல் பரூவா இந்தியாவின் 2-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார். 1997-ல் மூன்றாவது கிராண்ட்மாஸ்டர் கிடைத்தார். பிரவீன் திப்சே. அதாவது முதல் 9 வருடங்களில் இந்தியாவுக்கு மூன்று கிராண்ட்மாஸ்டர்களே கிடைத்தார்கள்.
2000-ம் ஆண்டுக்குப் பிறகு வேகம் எடுத்தது. நடுவில் 2005-ல் மட்டும் தான் ஒருவரும் கிடைக்கவில்லை. மற்ற எல்லா வருடங்களிலும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கிராண்ட்மாஸ்டர்களாவது கிடைத்தார்கள். 2014-ல் முதல்முறையாக ஒரே வருடத்தில் ஆறு கிராண்ட்மாஸ்டர்கள் கிடைத்தார்கள். 2018-ல் எட்டு பேர். 2020-ல் கரோனா சூழல் காரணமாக இருவர் மட்டுமே.
மாநிலங்கள் வழங்கிய கிராண்ட்மாஸ்டர்கள்
| மாநிலங்கள் | கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கை |
| தமிழ்நாடு | 26 |
| மஹாரஷ்டிரம் | 10 |
| மேற்கு வங்கம் | 9 |
| தில்லி | 6 |
| தெலங்கானா | 5 |
| ஆந்திரப் பிரதேசம் | 4 |
| கேரளா | 3 |
| கர்நாடகம் | 3 |
| ஒடிஷா | 2 |
| குஜராத் | 2 |
| கோவா | 2 |
| ராஜஸ்தான் | 1 |
| ஹரியாணா | 1 |
| மொத்தம் | 74 |
இந்தியாவில் 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் இருந்தாலும் இதுவரை 13 மாநிலங்களில் இருந்து மட்டுமே செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் கிடைத்துள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு அடுத்ததாக மேற்கு வங்கமும் மஹாராஷ்டிரமும் அதிக கிராண்ட்மாஸ்டர்களைத் தந்துள்ளன.
உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீஹார், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து இதுவரை ஒரு கிராண்ட்மாஸ்டரும் நமக்குக் கிடைக்கவில்லை. செஸ்ஸைத் தீவிரமாகக் கற்றுக்கொள்ள ஆங்கில அறிவும் அவசியம் என்பதால் இதுவும் ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. எனினும் செஸ்பேஸ் போன்ற செஸ் தளங்கள் தற்போது ஹிந்தியிலும் இயங்குவதால் விரைவில் நிலைமை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக இளைஞர்கள் அதாவது 20 வயதுக்குட்பட்டவர்கள் பலர் கிராண்ட்மாஸ்டராக ஆகிறார்கள். இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் பட்டியலில் 13, 14 வயது பள்ளி மாணவர்களும் இடம்பெற்றிருப்பதைக் காண முடிகிறது.
இந்திய செஸ்ஸின் வளர்ச்சி
| வருடம் | இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் எண்ணிக்கை |
| 1988 | 1 |
| 1991 | 1 |
| 1997 | 1 |
| 2000 | 2 |
| 2001 | 1 |
| 2002 | 1 |
| 2003 | 2 |
| 2004 | 2 |
| 2005 | 0 |
| 2006 | 4 |
| 2007 | 1 |
| 2008 | 2 |
| 2009 | 2 |
| 2010 | 3 |
| 2011 | 2 |
| 2012 | 4 |
| 2013 | 6 |
| 2014 | 1 |
| 2015 | 5 |
| 2016 | 3 |
| 2017 | 6 |
| 2018 | 8 |
| 2019 | 7 |
| 2020 | 2 |
| 2021 | 5 |
| 2022 | 2 |
| மொத்தம் | 74 |
1960களில் இருந்து அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மேனுவல் ஆரோன் தேசிய அளவில் ஆதிக்கம் செலுத்தினார். இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர் பட்டத்தைப் பெற்றவர் இவர் தான். பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். விஸ்வநாதன் ஆனந்துக்கு முன்பு இந்தியாவில் செஸ் விளையாட்டில் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையைப் பலருக்கும் உருவாக்கினார். இதனால் தான் தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட செஸ் ஒலிம்பியாட் பாடலில் மேனுவல் ஆரோனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
52 வயதானாலும் இன்னும் சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த். இந்தியாவில் ஒரு பெரிய செஸ் புரட்சிக்குக் காரணமானவர் என விஸ்வநாதன் ஆனந்தையே அனைவரும் சொல்வார்கள். உலக செஸ் சாம்பியன் பட்டங்களை ஐந்து முறை வென்றுள்ளார். அனைத்து இந்திய செஸ் வீரர்களும் ஆனந்த் தான் பெரிய முன்னுதாரணம்.
தமிழகத்தில் செஸ் என்றால் என்னவென்று தெரியாதவர்களும் தற்போது பிரக்ஞானந்தாவை அறிந்துள்ளார்கள். தமிழகத்தின் பெருமைமிக்க விளையாட்டு வீரர்களில் ஒருவராக உள்ளார். சமீபத்தில் செர்பியாவில் நடைபெற்ற பாரசின் ஓபன் செஸ் போட்டியை வென்றார் 16 வயது பிரக்ஞானந்தா. அதற்கு முன்பு, நார்வே செஸ் ஓபன் போட்டியில் குரூப் ஏ பிரிவில் போட்டியிட்டு சாம்பியன் பட்டம் வென்றார். சமீபத்தில் உலக சாம்பியன் கார்ல்சனை இருமுறை தோற்கடித்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். விஸ்வநாதன் ஆனந்துக்கு அடுத்ததாக சர்வதேச அளவில் பெரிய அளவில் சாதிப்பார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
செஸ் தரவரிசையில் 2700 புள்ளிகளைக் குறைந்த வயதில் அடைந்த இந்திய வீரர் என்கிற பெருமையைச் சமீபத்தில் அடைந்தார் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ். உலகளவில் 3-வது இளம் வீரர். ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற போட்டியில் இந்தச் சாதனையை அவர் படைத்தார். சீனாவின் வீ யி, 15 வருடங்கள், 7 மாதங்கள், 28 நாள்களில் 2700 புள்ளிகளை அடைந்து உலக சாதனை படைத்தார். பிரான்ஸைச் சேர்ந்த அலிரேஸா, 16 வருடங்கள், 1 மாதம், 10 நாள்களிலும் குகேஷ் 16 வருடங்கள், 1 மாதம், 17 நாள்களிலும் இந்த உயரத்தை அடைந்துள்ளார்கள். 2019-ல் இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் (12 வயது) என்கிற சாதனையைப் படைத்தார் குகேஷ். உலகளவில் 2-வது இடம். 2700 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த குகேஷுக்கு கார்ல்சன், ஆனந்த் ஆகியோர் பாராட்டு தெரிவித்தார்கள்.
தமிழகத்தின் சார்பாக குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர், ஆ.பி. ரமேஷ். இந்தியாவின் 10-வது கிராண்ட்மாஸ்டரான ஆர்.பி. ரமேஷ் தற்போது இந்தியாவின் முன்னணி செஸ் பயிற்சியாளராக உள்ளார். பிரபல செஸ் வீராங்கனை ஆர்த்தியைத் திருமணம் செய்த ரமேஷ், தனது மனைவியுடன் இணைந்து 2008-ல் சென்னையில் செஸ் குருகுல் என்கிற செஸ் பயிற்சி மையத்தைத் தொடங்கி அதன் வழியாக பிரக்ஞானந்தா உள்பட 20-க்கும் அதிகமான கிராண்மாஸ்டர்களை உருவாக்கியுள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பி அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
இன்னும் பல விஸ்வநாதன் ஆனந்த்களும் பிரக்ஞானந்தாக்களும் தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பதால் தான் ரூ. 100 கோடிக்கும் அதிகமாகச் செலவழித்து மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகிறது தமிழக அரசு. கனவுகள் நிறைவேறட்டும்.
தமிழக செஸ் கிராண்ட்மாஸ்டர்கள்
| 1. | விஸ்வநாதன் ஆனந்த் (1988, இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர்) |
| 2. | சசிகிரண் (2000, இந்தியாவின் 5-வது கிராண்ட்மாஸ்டர்) |
| 3. | ஆர்.பி. ரமேஷ் (2004, இந்தியாவின் 10-வது கிராண்ட்மாஸ்டர்) |
| 4. | மகேஷ் சந்திரன் (2006, இந்தியாவின் 12-வது கிராண்ட்மாஸ்டர்) |
| 5. | தீபன் சக்ரவர்த்தி (2006, இந்தியாவின் 13-வது கிராண்ட்மாஸ்டர்) |
| 6. | அருண் பிரசாத் (2008, இந்தியாவின் 18-வது கிராண்ட்மாஸ்டர்) |
| 7. | எஸ். கிடாம்பி |
| 8. | ஆர்.ஆர். லக்ஷ்மண் (2009, இந்தியாவின் 20-வது கிராண்ட்மாஸ்டர்) |
| 9. | அதிபன் (2010, இந்தியாவின் 23-வது கிராண்ட்மாஸ்டர்) |
| 10. | எஸ்.பி. சேதுராமன் |
| 11. | எம்.ஆர். வெங்கடேஷ் |
| 12. | ஷ்யாம் சுந்தர் (2013, இந்தியாவின் 31-வது கிராண்ட்மாஸ்டர்) |
| 13. | விஷ்ணு பிரசன்னா |
| 14. | அரவிந்த் சிதம்பரம் (2015, இந்தியாவின் 37-வது கிராண்ட்மாஸ்டர்) |
| 15. | கார்த்திகேயன் முரளி |
| 16. | அஸ்வின் ஜெயராம் (2015, இந்தியாவின் 39-வது கிராண்ட்மாஸ்டர்) |
| 17. | பிரியதர்ஷன் (2016, இந்தியாவின் 44-வது கிராண்ட்மாஸ்டர்) |
| 18. | ஸ்ரீநாத் நாராயணன் (2017, இந்தியாவின் 46-வது கிராண்ட்மாஸ்டர்) |
| 19. | பிரக்ஞானந்தா (2018, இந்தியாவின் 52-வது கிராண்ட்மாஸ்டர்) |
| 20. | கார்த்திகேயன் |
| 21. | என்.ஆர். விசாக் (2019, இந்தியாவின் 59-வது கிராண்ட்மாஸ்டர்) |
| 22. | குகேஷ் |
| 23. | இனியன் |
| 24. | ஆகாஷ் கணேசன் |
| 25. | அர்ஜுன் கல்யாண் |
| 26. | பரத் சுப்ரமணியன் |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.